பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

608நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

மண்வெட்டி சரிந்த மண்ணுக்குள் புதைந்துவிட்டது. கண்மூடித் திறப்பதற்குள் ஒரு பெரிய அலை மண்சரிந்த இடத்தில் வந்து மோதியது.

அடுத்து ‘ஹோ’ வென்று தண்ணீர் எதையோ உடைத்துக்கொண்டு பாயும் பெரிய சப்தம் அந்தப் பிராந்தியத்தில் பயங்கரமாக எதிரொலித்தது. பொன்னையா தண்ணீரில் மிதந்தான். எவ்வளவுதான் நீச்சல் தெரிந்தவனாக இருக்கட்டுமே; மேட்டிலிருந்து பள்ளத்தில் உடைத்துப் பாயும் தண்ணீரில், எதிர்நீச்சுப் போட யாரால் முடியும்? மகாகோரமாகச் சுழித்தோடிய உடைப்பு வெள்ளம், அவனை நீந்தவும் விடவில்லை; கரை சேரவும் விடவில்லை. தன்னோடு இழுத்துக் கொண்டு போயிற்று.

தங்கமும் இந்த உடைப்பின் பயங்கர இரைச்சலைக் கேட்டாள். ஆடுகளை விட்டு விட்டுத் தென்பக்கத்துக் கரைமேல் ஏறி ஓடி வந்தாள். தன் புருஷன் என்ன ஆனான் என்றே அவளுக்குத் தெரியவில்லை. எதிரே உடைந்து மூளியாக நிற்கும் வடக்குப் பக்கத்துக் கரையைத்தான் அவளால் காண முடிந்தது. சிறிது நேரத்தில் வடபக்கத்துக் கரையில் அடைப்பு வேலைக்காக ஊர் ஜனங்கள் கூட்டமாக வந்தபோது, தென்கரையில் நின்றுகொண்டிருந்த அவள் கையிலிருந்த தொரட்டுக் கம்பை ஆட்டி, அவர்களைப் பார்த்துக் கூச்சல் போட்டாள். ஆனால் அவள் கூச்சலை யாரும் கவனிக்கவே இல்லை.

“ஏண்டா, இதெல்லாம் நிஜந்தானாடா?”

"ஐயோ! சாமீ, நீங்க வேணும்னா அங்கே போயிப் பாருங்க - அந்தப் பொன்னையாப் பய சவத்தை; குறுக்குத் துறை மதகிலே சிக்கிக் கிடந்திச்சாம். கொண்டாந்து போட்டிருக்காங்க.” வெட்டியான் அழுத்தமாகக் கூறினான்.

மூளியாக உடைந்து நிற்கும் கண்மாய்க்கரை, மூளியாக வெறுமை தவழும் தங்கத்தின் கழுத்து, இரண்டும் ஒரே சமயத்தில் உருவெளித் தோற்றமாகப் பரமசிவம் பிள்ளைக்குத் தோன்றின. ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பெருமூச்சு விட்டார்.

‘வீரையாக் கோனான் மருமகன் வேர்வெட்டப் போனார்போல’ என்று காலப்போக்கில் ஒரு பழமொழியே வற்றாயிருப்பு கிராமத்தில் உண்டாகி விட்டது!

(1963-க்கு முன்)