பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

612நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


இரண்டு மூன்று தலைமுறையாக கையாளப்படாத இந்தச் சோதனை நடக்கப் போகும் செய்தி ஊரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது. ‘தெய்வம் குடத்தில் உள்ள பாம்பின் மூலமாக, எப்படித் தீர்ப்பு வழங்குகிறது’ என்ற விந்தையைக் காணத் துடிக்கும் ஆவல் எங்கும் நிறைந்திருந்தது. வீரநாராயணனாவது கொஞ்சம் கவலைப்படுவது போல, வாட்டமாகக் காணப்பட்டான். வேலப்பனோ, பாம்பு தன்னை நிச்சயமாகக் கடிக்காது என்று பலரிடமும் சிரித்துப் பேசி வந்ததோடன்றி, உண்மையிலேயே கவலையில்லாமல் குஷாலாகச் சுற்றித்திரிந்து கொண்டுமிருந்தான். அவன் நம்பிக்கை மற்றவர்களை வியக்கச் செய்தது.

ன்று வெள்ளிக்கிழமை. மாலை ஆறு நாழிகைக்குத் தெய்வ சாட்சியைப் பரிசோதிப்பது என்று பஞ்சாயத்தார் முடிவு செய்திருந்தனர். நாலரை நாழிகை வரை எதிர்பார்த்தனர். இருவரில் யாராவது ஒருவர் பாம்புக்குப் பயந்து கொண்டு, குற்றத்தைத் தாமாக வலுவில் ஒப்புக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்தது வீணாயிற்று. வேலப்பன் கடைசிவரை ‘கல்லுளி மங்கனாகவே’ நடித்துவிட்டான். வீரநாராயணன் என்ன செய்வான், பாவம்? குற்றம் செய்திருந்தால்தானே அவன் குற்றத்தை ஒப்புக் கொள்ள முடியும்? ஐந்து நாழிகைக்குப் பஞ்சாயத்தார் நாட்டாண்மைத் தேவர் தலைமையில் மாரியம்மன் கோவிலின் முன் மண்டபத்தில் கூடினர். மண்டபத்தில் எள் போட்டால் விழ இடமில்லை. இந்த அதிசயத்தைப் பார்க்க ஊரே கூடியிருந்தது. ஆனால் இத்தனை வம்புக்கும் காரணமான நீலம்மாள் மட்டும் அங்கு வரவேயில்லை.

பாம்புப் பிடாரன் செப்புக் குடங்களை ஆடாமல் அசையாமல் எடுத்துக்கொண்டு வந்து பஞ்சாயத்தாருக்கு முன்னால் வைத்துவிட்டு ஒதுங்கி நின்றான். அவன் கையில் மகுடியும் வேரும் இருந்தன. பாம்பு குடத்தில் தங்காமல் ஓட முயன்றாலோ அநாவசியமாக வழக்கில் சம்பந்தப்படாதவர்களைக் கடிக்க முயன்றாலோ, அவன் அவற்றை உபயோகப்படுத்துவது வழக்கம். அந்த முன்னெச்சரிக்கைக்காகவே அவன் அவற்றைக் கையில் வைத்துக் கொண்டிருந்தான்.

வீரநாராயணனும் வேலப்பனும் பஞ்சாயத்தாருக்கு முன்னால் குடங்களுக்கு அருகே வந்து நின்றனர்.மாரியம்மன் கோவில் பூசாரி வழக்கப்படி, இருவர் கழுத்திலும் இரண்டு செவ்வரளி மாலைகளைக் கொண்டுவந்து போட்டு, நெற்றியில் குங்குமப் பொட்டுக்களை இட்டான்.வாழ்வோ, சாவோ தெய்வத்தை நம்பி அதன் துணையோடு துணிந்து இறங்கும் பண்பட்டமுறை அது. அந்த மாலைக்கும் பொட்டுக்கும் ‘தடை காப்பு’ என்பது அவர்கள் பஞ்சாயத்தில் வழங்கும் பெயர். குற்றம் செய்யாதவனைக் குடத்துக்குள்ளே இருக்கும் பாம்பு கடிக்காமற் தடுப்பதற்காகவே அம்மன் இடுகின்ற அரளி மாலையும் குங்குமப் பொட்டும் அமைவதினாலேயே ‘தடை காப்பு’ என்ற பெயர் ஏற்பட்டிருந்தது.

“என்னப்பா பிடாரன்! அம்மன் சாட்சியா ரெண்டு குடத்திலேயும் சாதி நல்ல பாம்புதானே இருக்குது?” நாட்டாண்மைக்காரர் விசாரித்தார். பிடாரன் ‘ஆமாம்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டினான்.