பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/615

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / நல்ல (பாம்பு) தீர்ப்பு 613


“ஊராருக்கு ஒரு வார்த்தை எல்லாரும் நல்லதை எண்ணி அம்மனைக் கும்பிடுங்க. நீலம்மா விஷயமா, இவங்க ரெண்டு பேருக்கு ஏற்பட்ட வழக்குக்கு மகமாயி பத்திரகாளி, மாரியம்மா தீர்ப்பு வழங்கப்போறா நியாயம் தெரியப் போகுது. நீதி வெளிவரப் போகுது.”

மண்டபத்தில் சூன்ய அமைதி. கூடியிருந்தவர்கள் மூச்சுவிடும் ஓசைகூடக் கேட்கவில்லை. எல்லா விழிகளும் செப்புக் குடம், அவற்றருகில் நீதிக்காக உயிரைப் பணயம் வைத்து நின்றுகொண்டிருப்போர் மீதே நிலைத்திருந்தன.

“அப்பா, வீரநாராயணா! வேலப்பா! தெய்வத்தை மனசிலே நினைச்சு ஆளுக்கு ஒரு குடத்தில் மூணு தரம் கையை துழைச்சு எடுங்க; பார்ப்போம்.” கூடியிருந்தோர் விழிகளில் ஆவல் தவழ்ந்தது.

நாட்டாண்மையின் உத்தரவு கிடைத்து விட்டது. வேலப்பன் கீழே வைத்திருந்த இரண்டு குடங்களையும் ஓரிரு விநாடிகள் உற்று உற்றுப்பார்த்தான்! பின்பு வடபுறமாக இருந்த குடத்தில், முகம் மலரக் கையை நுழைத்தான்.

வீரநாராயணனோ ஒன்றையும் பார்க்கவில்லை. வேலப்பன் எடுத்ததுபோக, எஞ்சியிருந்த குடத்தில் கவலை நிறைந்த முகத்தோடு கையை நுழைத்தான்.

வீரநாராயணன் மூன்று முறைக்கு மேலும், ஒன்பது பத்துமுறை குடத்தில் கையை நுழைத்து எடுத்து விட்டான்! அவன் குடத்தில் பாம்பு இருந்ததாகவே தெரியவில்லை. வேலப்பன் குடத்தில் கையை நுழைக்கும்போது மகிழ்ச்சியோடு நுழைத்தான். ஆனால், உள்ளே நுழைத்த கையை வெளியே எடுக்கவேயில்லை. குடமும் கையுமாக அலறித் துடித்தான் அவன். உள்ளிருந்து ஏதோ அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

“எங்கே அந்தப் பிடாரப் பயல்? அயோக்கியன் மோசம் பண்ணிப்பிட்டான் காசு வாங்கிக்கிட்டு ஏமாத்திப்புட்டான். ஐயோ! எத்தனை கடிதான் பொறுப்பேன்? கையை வெளிலே எடுக்க வரலியே? ஏதோ இறுக்கிப் பிடிச்சிருக்கே” - வேலப்பன் குடமும் கையுமாக நெருப்பில் விழுந்த புழுப்போலத் துடித்தான்.

“ஐயோ! சாமீ... நான் ஒண்ணும் மோசம் பண்ணலியே... நீங்க சொன்னபடி ஒங்க குடத்திலே சாரைப் பாம்பைத் தானே அடைச்சேன்! அவர் குடத்திலே தானே ‘நல்லதே’ அடைச்சேன்” பிடாரன் கத்தினான்.

கூடியிருந்த மக்கள், பஞ்சாயத்தார், வீரநாராயணன், யாருக்குமே எதுவும் தெளிவாக விளங்கவில்லை. ஒரு முழுமனிதனை உயிரோடு நெருப்பின் மீது தூக்கிப் போட்டால், அவன் எப்படித் துள்ளி விழுந்து துடிப்பானோ, அப்படித் துடித்துக் கொண்டிருந்தான் வேலப்பன். குடத்திற்குள்ளிருந்து, அவன் வலது கை வெளிவரவேயில்லை. குடத்திற்குள்ளே ‘படபட’வென்று சவுக்கினால் ஓங்கியடிப்பது போன்ற ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.