பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82. எங்கிருந்தோ வந்தது!

மூணாறிலிருந்து உடுமலைக்குப் புறப்படும் கடைசி பஸ் புறப்பட்டு விட்டது. எஸ்டேட் வாசலிலிருந்த டீக்கடையில் தோட்டத் தொழிலாளர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. டீக்கடை ராமுண்ணி நாயர் ஓய்வு ஒழிச்சலின்றிச் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தான். நாயர் டீக்கடையில் வியாபாரம் உச்ச நிலையை அடையும் நேரம் அதுதான். தோட்டத் தொழிலாளிகள் கொழுந்து போட்டு விட்டு, அன்றாடக் கூலியை வாங்கிக் கொண்டு வெளி வரும் போது, நாயருடைய கடையில் தேங்காய் எண்ணெயில் வறுத்த நேத்திரங்காய் வறுவல் கமகமத்துக் கொண்டிருக்கும்.

அரையணாவுக்கு வறுவலையும், ஒரு டீயையும் சாப்பிடாமல் அங்கிருந்து நகர எப்படிப்பட்ட ஆளுக்கும் மனம் வராது. நாயர் கடைக்கு விளம்பர போர்டு கிடையாது. உட்காரப் பெஞ்சுகள் கூடக் கிடையாது. வாசலில் சொதசொதவென்று ஈரம் கசிந்து கொண்டிருக்கும். ஆனாலும் வியாபாரத்துக்கு மட்டும் குறைவில்லை. நாயர் கடை வியாபார ரகசியமெல்லாம், அந்த நேந்திரங்காய் வறுவலின் மணத்துக்குள்தான் அடங்கியிருந்தது.

அந்த இடம் மூணாறில் ஒரு கேந்திர ஸ்தானம். தேயிலைத் தோட்டங்களின் பிரதேசத்துக்கு நடுமையான சாலை அது. ஆல்வாய், உடுமலை, பொள்ளாச்சி முதலிய வெளியூர் பஸ்கள் வந்து நிற்குமிடம். புறப்படுமிடமும் அதுதான்.

அப்போது மாலை ஆறரை மணிக்கு மேலிருக்கும். பிசுபிசுவென்று இளஞ் சாரல் தூறிக்கொண்டிருந்தது. தொழிலாளிகள் கூட்டம் குறைந்து விட்டது. சாவகாசமாகக் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு தோட்டக் கங்காணிகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். முதுகுகளில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் நீண்ட கூடைகளோடு, கூலிக்காரப் பெண்கள் காலனிகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். ஏற்கனவே மேகங்கள் கும்மென்று இருண்டிருந்தன. இப்போது அந்தி இருட்டும் சேர்ந்து கொண்டது. மலை முகடுகளைப் பாலாடை போல் வெண்ணிற மூடு பனி போர்த்திருந்தது. காட்டுக் கோழிகள், மிளா மான்கள், யானைகள் ஆகிய வனவிலங்குகள் தொலைவில் இருப்பதற்கு அறிகுறியான ஒலிகள் மங்கலாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

எஸ்டேட்டுகளில் இரவுக் காவலுக்குப் போகும் பாராக்காரர்கள், கரும் பூதங்களைப் போலப் பெரிய பெரிய கம்பளி அங்கிகளைப் போட்டுக் கொண்டு போனார்கள். மலை நடுவே இருந்த மெயின் ரஸ்தாவின் ஜீப்கள், தோட்டத்து லாரிகள், டாக்ஸிகள், சர்வீஸ் பஸ்கள் சதா போன வண்ணமேயிருக்கும். இன்று ரஸ்தாவில் சூனிய அமைதி குடி புகுந்திருந்தது.