பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/620

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

618நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


ராமுண்ணி நாயர் டீக்கடையை இழுத்து மூடுவதற்குத் தயாராகி விட்டான். மேற்குப் பக்கம் ரஸ்தாவிலிருந்து வந்த ஒரு புத்தம் புதிய ‘ஹில்மன்’ கார் நாயர் கடை வாசலில் வந்து நின்றது. காருக்குள் வேட்டையாடும் துப்பாக்கிகளோடு, வெள்ளைக்காரர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஒரு வெள்ளைக்கார யுவதியும் வீற்றிருந்தாள். அவருடைய மனைவியாகத்தான் இருக்கவேண்டும். காரை ‘டிரைவ்’ செய்துகொண்டு வந்த ஆள் யாரோ உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பவர் மாதிரி இருந்தார். தோற்றத்திலிருந்து மலையாளி என்றே அனுமானிக்க முடிந்தது.

“நாயர்...! நாயர்...!”

“யாரு மேனன் ஸாரா?” கடையின் உட்புறத்திலிருந்த ராமுண்ணி நாயர் கேட்டுக் கொண்டே வெளியே வந்தான்.

“என்னப்பா, நீ இன்னும் தயாராகவில்லையா?”

“இதோ ஒரு விநாடியிலே வந்து விடுகிறேனுங்க” என்று கூறி உள்ளே சென்றான் நாயர். கால்நாழிகையில் டீக்கடைக்குள்ளிருந்து வேட்டையாடுவதற்குரிய ஆடையோடு துப்பாக்கி சகிதம் வெளியே வந்தான். டிரைவருக்கு அருகில் நாயர் உட்கார்ந்து கொண்டதும் கார் புறப்பட்டு மூணாறில் சோத்துப்பாறை என்ற மலைக்குச் செல்கிற ரஸ்தாவில் சென்றது.

ராமுண்ணி நாயர் அந்தப் பிராந்தியத்தில் பெயர் பெற்ற விகாரி (வேட்டை நிபுணன்), டீக்கடையோடு வேட்டையாடப் போவதும், வேட்டையாட வருபவர்களுக்கு கைட் (வழிகாட்டி)ஆகச் செல்வதும் அவனுக்கு உபதொழில்கள். அதில் நல்ல வருமானமும் உண்டு.

ன்று மாலையும் அப்படித்தான் ஒரு ‘சான்ஸ்’ அவனுக்குக் கிடைத்திருந்தது. அர்ச் வுட் என்ற வெள்ளைக்காரத்துரைக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் யானை ஒன்று புகுந்து அழித்து வந்தது. நாள் தவறாமல் தொடர்ந்து ஒரு வாரகாலமாக இப்படி யானையால் தோட்டத்திற்குத் தீங்கு ஏற்படவே, ‘அகப்பட்டால் அந்த யானையைச் சுட்டு விடலாம்’ என்று பிடபிள்யூ டி அனுமதி பெற்றார் அர்ச் வுட் துரை. எஸ்டேட் மானேஜரான கோப்பு மேனன் டீக்கடை நாயரைத் துரையின் உதவிக்கு அழைத்திருந்தார்.

எஸ்டேட் அருகில் யானை பழகுகிற இடத்தில் உயர்ந்த மரங்களுக்கு இடையே மூங்கில் கழிகளால் ஒரு பரண் கட்டப்பட்டிருந்தது. அந்தப் பரணின்மேல் இரவு முழுவதும் காத்திருந்து, எப்படியாவது யானையை வேட்டையாடி விடவேண்டும் என்று துரை, மேனன், நாயர் மூவரும் சேர்ந்து திட்டமிட்டிருந்தார்கள். துரையின் அருமந்த மனைவி லில்லி அர்ச் வுட் வேட்டையைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டதால் அவளையும் உடனழைத்துச் சென்றனர். எஸ்டேட் கட்டிடத்தில் இருந்த ‘ஷெட்டில்’ காரை நிறுத்திவிட்டு யானை வேட்டைக்காகப் போட்டிருந்த பரண்மேல் அவர்கள் எல்லாரும் ஏறி நின்றுகொண்டனர்.