பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / எங்கிருந்தோ வந்தது! 619


நாலைந்து பெரிய சிங்கோனா மரங்களின் கிளைகள் சந்திக்கும் இடத்தில், மூங்கில் கழிகளால் எழுபதடி உயரத்தில், பத்து இருபது அடி நீள, அகலத்துக்கு அந்தப் பரண் அமைக்கப்பட்டிருந்தது. மலைச் சரிவிலிருந்த எஸ்டேட்டுக்குள் மிருகங்கள் எந்த வழியாகப் பிரவேசிப்பது வழக்கமோ, அந்த வழியிலேயே பரண் இருந்தது.

அவர்கள் பரணில் ஏறுகிறபோது ஏழேகால் மணி. ‘கீ-இ-இ’ என்ற சிள்வண்டுகளின் ஓசை அடர்ந்த இருட்டு. நான்கு பேர் கையிலும் ‘டார்ச்லைட்’ இருந்தன. பரண்மேல் மூங்கில் உறுத்தாமல் இருப்பதற்காகக் கித்தான்கள் ஒன்றின் மேல் ஒன்றாக விரிக்கப்பட்டிருந்தன. இதனால் சிமெண்டு பூசிய தரையைப் போலப் பரண் சமதளமாகத் தோன்றியது.

எல்லாருடைய துப்பாக்கிகளையும் வாங்கிப் பரணின் ஒரு மூலையில் சேர்த்து வைத்திருந்தான் நாயர். அர்ச்வுட்டும் திருமதி அர்ச்வுட்டுமாக ஆங்கிலத்தில் ஏதோ சுவாரஸ்யமான சம்பாஷணையில் ஈடுபட்டிருந்தனர். ராமுண்ணி நாயரும் கோப்பு மேனனும் பரணின் மற்றொரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, அடர்ந்து புதர் செறிந்த வழியில் யானை வருகிறதா என்பதை ‘டார்ச்லைட்’டை அடித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நாயர், அதை நீ நேரில் பார்த்ததில்லையே? யானை படு முரடு. அதோடு இப்போது அதுக்கு மதம் பிடித்த நிலை, உயரமே பன்னிரண்டடி சொல்லலாம். கொம்புகள் இரண்டரை அடிக்குக் குறையாது.”

“இதைவிட முரட்டு யானையெல்லாம், இந்த நாயர் கைத்துப்பாக்கியாலே குண்டு வாங்கிச் செத்துருக்குதுங்க. இதென்ன பிரமாதம்!”

“அது என்னமோ நாயர்! இன்றைக்கு இதைக் கொன்று தொலைக்காமல் திரும்புவதில்லை என்று துரை கங்கணம் கட்டிக்கொண்டு வந்திருக்கிறார். இந்தப் பதினைந்து நாளைக்குள்ளே மட்டும் இந்த யானையினாலே, பத்தாயிரத்துக்கு மேல் நஷ்டம் என்றால் பார்த்துக் கொள்ளேன்?”

“யானை மட்டும் இன்றைக்கு வரவேண்டும். மூன்று பேரும் துப்பாக்கியை எடுக்க வேண்டியது. அது வந்ததும் குறி பார்த்து நான் ‘ரைட்’ கொடுத்ததும் ‘பயர்’ பண்ணிவிட வேண்டியது.”

“மூன்று குண்டுகளையும், அதற்கும் அதிகமாக வாங்கிக் கொண்ட பின்னும் அது தறிகெட்டு ஒடுமே, அப்பா!”

“அதை ஓடவிடாமல் செய்வதற்கு ஒரு வழி இருக்குதுங்க. தொடர்ந்து மர்ம ஸ்தானங்களாகப் பார்த்து நான் சுடுவேன். எப்படியும் அது விழுந்துதான் ஆகனும்.”

“உனக்கில்லாத சாமர்த்தியமா, நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேன். நீதான் வேட்டைக்கென்றே பிறந்தவன்.ஆயிற்றே! துரையின் நன்மதிப்பை அடைய உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு.”