பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

620நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“அட! இதென்ன பிரமாதமுங்க? மூன்றாம் வருஷம் நாகர்கோவில் பக்கத்திலே, பாலமோர் எஸ்டேட்டிலே ஒரு வேட்டைக்குப் போயிருந்தேன். என் கையிலே இருந்ததெல்லாம் ஒரே ஒரு இரட்டைக் குழாய் ‘ரைபிள்’தான். இப்போதாவது பரண்மேல் இருக்கோம், அப்போ தரையிலே ஒற்றையாக நேருக்கு நேர் நின்றே, இரண்டு ‘கொம்பன்’களைச் சுட்டுத் தள்ளினேன். ‘பாலமோர்’ எஸ்டேட்டே ஆச்சரியப்பட்டது!”

“ராமுண்ணி, நீ சொல்லவா வேண்டும்? உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன?”

“இருங்க! இருங்க! புதரிலே ஏதோ சலசலப்புக் கேட்கிறாப் போல் இருக்கிறது. அந்த டார்ச்சை இப்படிக் கொடுங்க.”

ராமுண்ணி நாயர் கோப்பு மேனன் கையிலிருந்த டார்ச்சை வாங்கி வழிமேல் அடித்துப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை.

துரை ஆங்கிலத்தில் கோப்பு மேனனிடம் ஏதோ கேட்டார். மேனன் அதற்கு ஆங்கிலத்திலேயே மறுமொழி கூறினார். அடுத்து திருமதி துரையும் தனது கீச்சுக் குரலில் ஏதோ கேட்டாள். மேனன் அதற்கும் பதில் சொன்னார்.

“ஒன்றுமில்லை! நேரம் கழிந்துகொண்டே இருக்கிறதே? இன்று அது வராதோ? என்று கேட்டார். ‘வழக்கப்படி இன்றைக்கும் வந்துதான் தீரும்’ என்று நான் பதில் சொன்னேன். ‘மிருகங்கள் வழக்கமான பாதைகளை ஒரு போதும் மறக்க மாட்டா’ என்று படித்திருப்பதாக ‘அம்மா’ கூறினார்கள். ‘அது உண்மைதான்’ என்றேன் நான்” என்றார் மேனன், நாயரிடம்.

டசடவென்று மரங்கள் முறிபடுகிற ஓசை கோடைக்காலத்து இடிபோல ஒரு யானையின் பிளிறல். இருளை ஊடுருவிக்கொண்டு வந்த அந்தப் பயங்கரப் பிளிறலும் மரங்கள் முறிபடுகிற ஓசையும் பரண் மேலிருந்ததால் யாவரையும் குலை நடுங்கச் செய்தன. திருமதி அர்ச்வுட், துரையின் முதுகுக்குப் பின்னால் ஒடுங்கி மறைந்து கொண்டாள். முகத்தில் வெளிறலும் கண்களில் மிரட்சியுமாக அவள் பயந்து நடுங்கினாள். துரைக்கும் கோப்புமேனனுக்கும் கூட உள்ளுற நடுக்கம்தான். ஆனால் அதை நாயருக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு, தைரியசாலிகளாக நடித்தனர்.

உண்மையிலேயே பயப்படாமலும் நிதானத்துடனும் இருந்தவன் ராமுண்ணி நாயர் மட்டும்தான்.

“சப்தம் போடாமல் இருங்கள். கொஞ்ச அரவம் அதன் காதில் பட்டாலும் போதும் வந்த வழியே திரும்பி ஓடத் தொடங்கிவிடும்; அல்லது கீழே வந்து மரத்தை ஆட்டி அசைத்து நம்முடைய உயிருக்கே உலை வைத்து விடும்.” உடனிருந்தவர்களை எச்சரித்துவிட்டு ஓசைவந்த திக்கை நோக்கி டார்ச்லைட்டின் ஒளியைப் பாய்ச்சினான் நாயா்.