பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/623

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / எங்கிருந்தோ வந்தது! 621


ஏறக்குறைய இருபது கெஜ தூரத்தில் ஒரு சிறு கருங்குன்று கனவேகமாக உருண்டு வருவதுபோல் அந்தக் கொம்பன் யானை அட்டகாசமாகப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. குன்றின் நுனியில் இரண்டு வெள்ளைப் பிறைகள் முளைத்த மாதிரி நீண்ட தந்தங்கள் டார்ச் ஒளியில் மின்னின.

மகா தீரர்களைப்போல பேசிக் கொண்டிருந்த அர்ச்வுட் துரையும் துரையம்மாளும், கோப்பு மேனனும் பரணின் மேல் இருந்த இடம் தெரியவில்லை. மூலையில் பம்மிப் பதுங்கிக் கொண்டு விட்டனர்.

நாயர் அது வந்துகொண்டிருந்த திசையில் விளக்கைப் பாய்ச்சவும், அது சட்டென்று பதினைந்து கெஜ தூரத்தின் வழியிலேயே நின்று விட்டது. அநுபவஸ்தனான தானே தவறு செய்துவிட்டதை நாயர் அப்போதுதான் உணர்ந்தான். ‘டார்ச்’சை அனைத்து ஏற்றியதால் யானை சந்தேகமுறக் காரணமாக நடந்துகொண்டு விட்டோம் என்று தோன்றியது அவனுக்கு கப்பென்று ‘டார்ச்சை’ அணைத்துவிட்டு அவன் பேசாமல் இருந்தான்.

“என்னப்பா நாயர்?... ஏன் லைட்டை அணைச்சுட்டே?” கோப்பு மேனன் மெல்லிய குரலில் அவன் காதருகே முணுமுணுத்தார்.

“உஷ்! பேசாமல் இருங்கள். எல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன். கேட்கிறபோது துப்பாக்கியை மட்டும் அந்த மூலையிலிருந்து எடுத்துக் கொடுங்கள், போதும்...” நாயர் மேனனை எச்சரித்தான். ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தபடி மேனனும் துரையும் வேட்டையில் பங்கு கொண்டு யானையைச் சுடும் முயற்சியில் ஈடுபடுவதை இப்போது அச்ச மிகுதியினால் கைவிட்டு விட்டனர்.

விளக்கொளி நின்று போன பின் கால் நாழிகை அமைதியில் கழிந்தது. ஒருவிதமான சலனமும் ஓசையும் கேட்காததால் யானை நின்ற இடத்தைவிட்டு முன்புறத்திலோ பின்புறத்திலோ நகரவில்லை என்று தெரிந்தது.

சுடுவதற்குக் குறி வசதியாக அமைய வேண்டுமானால் அது இன்னும் அருகில் வரவேண்டுமென்பது நாயர் கருத்து. தாங்கள் உட்கார்ந்திருக்கிற பரணுக்கு நேராக அது வந்தவுடன் விளக்கை அடித்துக் குறி பார்க்கவேண்டும். குறிபார்த்த வேகத்திலேயே அது ஓட முயல்வதற்குள் குண்டுகளைச் சரமாரியாக அதன் உடலில் பாய்ச்சி முடித்துவிட வேண்டும்.

இந்தத் தீர்மானத்துடன் மேலும் சில விநாடிகள் பொறுமையைக் கடைப்பிடித்துப் பரண்மேல் அமைதியாக இருந்தான் அவன்.

‘சொத்’தென்று துப்பாக்கிகளின் மேலே ஏதோ விழுந்த மாதிரி ஓசை கேட்டது.

“மேனன் ஸார்! அது என்ன? துப்பாக்கி மேலே ஏதோ விழுகிறாப்போல ஓசை கேக்குதே?”