பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/624

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

622நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“ஒன்றுமில்லை நாயர் மரத்திலிருந்து ஏதோ சுள்ளி முறிந்து விழுந்திருக்கும். நீ காரியத்தைக் கவனி” நாயருக்கும் மேனனுக்கும் இடையில் மிக மெல்லிய குரலில் இந்தச் சம்பாஷணை நடைபெற்றது.

நாயர் கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு கவனித்தான். யானை நகரவில்லை.கொம்பை ஆட்டிக்கொண்டு, அமைதியாக நின்ற இடத்திலேயே நிற்பது டார்ச்சின் உதவியின்றியே தெரிந்தது.

மீண்டும் ‘சொத்’தென்ற ஓசையுடனே துப்பாக்கிகளின் மேல் ஏதோ விழுந்தது. நாயர் துப்பாக்கிகளைப் பரணின் வடக்கு மூலையில், மரப் பொந்திற்கருகில் வைத்திருந்தான். இப்பவும் முன்போலவே ஏதாவது சுள்ளிதான் விழுந்திருக்கும் என்று சமாதானமடைந்தான்.

குண்டு வெடிக்கும் குழாய்களை வடபுறம் யானை வருகிற பாதையை நோக்கியும், கைப்பிடிகளைப் பரணின் பக்கமாக இருக்கும்படி துப்பாக்கிகளை வைத்த நினைவு அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது.

மேனனின் உதவியின்றி நாயரே, தான் உட்கார்ந்த இடத்திலிருந்து கை நீட்டி எடுக்கக் கூடிய சமீபத்தில்தான் துப்பாக்கிகள் இருந்தன.

யானை பரணுக்கு அருகில் வரவேண்டியதுதான் பாக்கி. நாயர் துப்பாக்கியைக் கைநீட்டி எடுத்துவிடுவான். துரையின் கையிலும் மேனன் கையிலும் நாயர் கையிலும் தனித்தனியே டார்ச் லைட்டுகள்.இருந்தன. ‘யானை அங்கே வருகிற வரை வெளிச்சம் போட்டு அதை மிரட்டி ஓட்டி விடக் கூடாது’ என்றுதான் பேசாமல் ஒண்டிக் கொண்டு பரணில் இருந்தனர்.

கொஞ்ச நாழிகை ஆயிற்று. யானை பழைய பாய்ச்சலோடு மீண்டும் முன்னேறியது. பரணுக்கு அருகிலும் வந்துவிட்டது. அப்பப்பா! என்ன பயங்கரமான மதவெறி? மலையே அதிர்ந்து போகும்படியாகப் பிளிறிக்கொண்டு, கொம்புகளை ஆட்டியபடியே கீழே வந்து விட்டது. குறி பார்க்கவசதியாக சமீபத்தில் யானை வரவும், நாயர் லைட்டை அடித்துக் குறி பார்த்துக்கொண்டே கையைத் துப்பாக்கியின்மேல் வைத்தான்.துப்பாக்கி அவன் கையில் வரவில்லை.ஆனால், என்ன ஆச்சரியம்?. அவன் தொடுவதற்கு முன்பே தானாகவே எல்லாத் துப்பாக்கிகளும் படீர்படீரென்று வெடித்தன. அத்தனைக் குழாய்களிலிருந்தும் குண்டுகள் வடக்கு நோக்கிப் பாய்ந்தன. துப்பாக்கிப் புகையும் அதன் நெடியும் பரண்மேற் சூழ்ந்தது.

யானை முன்னிலும் அதிக பயங்கரமாகப் பிளிறிக் கொண்டுவந்த வழியே திரும்பி ஓடலாயிற்று. ‘இதென்ன மாயமா? சூன்யமா? துப்பாக்கிகளை ஒருவரும் தொடாமலிருக்கும்போதே வெடிக்கின்றனவே! வேட்டைக்கு வாகாக வந்து நின்ற யானை ஒரு நொடியில் தப்பி ஓடிவிட்டது. நாயருக்கு ஏமாற்றம் தாங்க முடியவில்லை.

“வாட்? வாட்!”துரை ஆச்சரியத்தோடு வினாவினார். “என்ன நாயர்? இதென்ன துப்பாக்கி தானாக வெடிக்கிறது!” மேனன் வியந்தார்.