பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



கண்டிப்பாக இந்த வீட்டில் ஏதோ ‘தோஷம்’ இருக்கிறது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.”

“நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்கு இருக்கிற அலைச்சல் போதாது என்று மறுபடியும் என்னை வீட்டுக்காக வேறே அலையச் சொல்கிறாயா? என்னால் கண்டிப்பாக முடியாது.”

“முடியாவிட்டால் யாருக்கு என்ன? இதோ உங்கள் அருமைப் பிள்ளை பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் சுருட்டிப் போர்த்திக் கொண்டு படுக்கையில் விழுந்துவிட்டான். தொட்டுப் பார்த்தால் ஜூரம் நெருப்பாய்க் கொதிக்கிறது. போய் டாக்டரைக் கூட்டிக் கொண்டு வாருங்கள்.”

“என்ன?... இதை ஏன் வந்ததுமே சொல்லவில்லை?”

“நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள் நீங்கள்தான் வரிந்து கட்டிக் கொண்டு என்னோடு வாய்ச் சண்டை போட வந்துவிட்டீர்களே”

“என்ன இழவு சனியனோ! வீட்டுக்குத் தோஷமானால், ‘நிமோனியாவும், டைபாய்டும்’ பாழப்ப்போன வீட்டுக்கல்லவா வரவேண்டும்? மனிதர்களுக்கு ஏன் வந்து தொலைக்கிறது?”

“நன்றாயிருக்கிறதே உங்கள் தர்க்க நியாயம்? யாராவது கேட்டால் சிரிக்கப் போகிறார்கள்! பேசாமல் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டுவாருங்கள்.என்னோடு விவாதம் செய்வதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம்!”

“சரி காப்பியைக் கொண்டு வா. சாப்பிட்டு விட்டுப் போய் டாக்டரைக் கூட்டிக் கொண்டு வருகிறேன்.”

ராஜம் காப்பியை எடுத்துக்கொண்டு வருவதற்காக உள்ளே சென்றாள். நான் படுக்கையில் போர்த்திப் படுத்துக்கொண்டிருந்த பையன் அருகிற் சென்றேன். போர்வையை ஒதுக்கிவிட்டு நெஞ்சில் கையை வைத்துப் பார்த்தேன். காய்ச்சல் அனலாகக் கொதித்துக்கொண்டிருந்தது. பையனுக்குத் தன் நினைவு இருந்ததாகத் தெரியவில்லை.

“போன ஜன்மத்தில் டாக்டருக்கும் மருந்துக் கடைக்காரனுக்கும் எந்த வகையில் கடன்பட்டேனோ? பொழுது விடிந்து பொழுது போவதற்குள் டாக்டருக்கும் மருந்துக்கும் செலவாகிற பணத்துக்குக் கணக்கு வழக்கே இல்லை”

காப்பியைச் சாப்பிட்டுவிட்டு டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்குள் கிளம்பினேன்.

டாக்டர் வந்தார், பார்த்தார்.

"பையனுக்கு மலேரியா ஜூரம் சார்”

"ஐயையோ! மலேரியாவா?.”