பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மூட நம்பிக்கை ★ 63



“ஜூரம் கடுமையாகத்தான் இருக்கிறது! ஆனாலும் கவலைப்படாதீர்கள். இரண்டு ஊசி போட்டுவிட்டுப் போகிறேன். இராத்திரிப் பொழுது கடந்துவிட்டால் கவலை இல்லை. விடிவதற்குள் அநேகமாக இறங்கிவிடும்”

டாக்டர் ஊசியைப் போட்டு விட்டுக் கிளம்பினார். அப்போது மாதக் கடைசி. கையில் வறண்ட நிலைமை. பையனின் வைத்தியச் செலவுக்கு யாரிடமாவது கைமாற்றாகப் பணம் வாங்கிக் கொண்டு வரலாம் என்று நானும் வெளியே கிளம்பினேன்.

நாராயணன் நெருங்கிய நண்பர். இந்த மாதிரி விஷயம் என்றால் உடனே உதவி செய்வார். நான் அவர் வீட்டுக்குத்தான் சென்றேன்.

“என்ன சார்! வாருங்கள்! ஏது இப்படி? அடியேனைத் தேடிக்கொண்டு.?” நாராயணன் மகிழ்ச்சியோடுதான் வரவேற்றார்.

மென்று விழுங்கிக் கொண்டே வந்த காரியத்தைச் சொன்னேன்.

“பணத்துக்கென்ன சார்? இதோ தருகிறேன். சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போகிறீர்கள். இந்தப் புதுவீட்டிற்கு வந்ததிலிருந்து உங்கள் வீட்டில் யாருக்காவது ஏதாவது நோக்காடு வந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. பணத்துக்குப் பிடித்த செலவு...” அனுதாபப்பட்டுக் கொண்டே நான் கேட்ட தொகையை எண்ணிக் கொண்டு வந்து கொடுத்தார் நாராயணன்.

“நம்ம போதாத காலத்துக்கு வீடு என்ன செய்யும்? வாசல் என்ன செய்யும்? ‘அவள்’ கூட அடிக்கடி இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள். எனக்கென்னவோ இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நீங்கள் கூட இதையெல்லாம் நம்புகிறீர்களா நாராயணன்?”

“நம்புவதிலும் நம்பாததிலும் என்ன இருக்கிறது? இதெல்லாம் ஒரு ஆசாபாசம்தான். தொடர்ந்து ஒரு மாறுதல் இருந்தால் அதைப் பற்றி எப்படியாவது சிந்திக்க வேண்டித்தானே இருக்கிறது?”

இதற்கப்புறம் பதினைந்து நாட்கள் கழித்துப் பையன் தலைக்குத் தண்ணிர் விட்டுக் கொண்டான். மெடிகல் சர்டிபிகேட் வாங்கி மறுபடியும் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விட்டு வந்தேன்.

பையன் எழுந்து நடமாடத் தொடங்கி முழுசாக இரண்டு நாட்கள் ஆகவில்லை. கைக்குழந்தைக்கு ஒரு பயங்கரமான வியாதி வந்துவிட்டது.

இருந்தது இருந்தாற்போல் திடீரென்று மூச்சுப் பேச்சு இல்லாமல் இரண்டு மணி நேரம் மூன்று மணிநேரம் கட்டைப்போலக் கிடந்தது."சரி கொடுத்து வைத்த ஆயுள் அவ்வளவுதான்! இனிமேல் மூச்சாவது, பேச்சாவது” என்று நினைத்தபோது திடீரென்று வீரிட்டு அழுதது. அரை மணி முக்கால் மணி நேரம் அது மாதிரி வீரிட்டு அழுது விட்டு மீண்டும் பழையபடி மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தது.

டாக்டரை அழைத்துக் கொண்டு வந்து காட்டினேன். அவர் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினார்.