பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“சார், இது சிறு குழந்தைகளுக்கு வருகிறதுண்டு! ‘கணை’ என்று பெயர். எங்களை விட நாட்டு வைத்தியர்களிடம் தான் இதற்குச் சரியான மருந்து இருக்கும். நீங்கள் எதற்கும் உடனே நல்ல நாட்டு வைத்தியராக ஒருவரைப் பார்த்துக் காண்பியுங்கள்.”

டாக்டர் கண்ணியமான மனிதர். ஒளிவுமறைவில்லாமல் தம்மால் முடியாது, தமக்கு அது தெரியாது என்பதை ஒப்புக் கொண்டு போய்விட்டார்.

ஒடோடிச் சென்று கைராசியும் நல்ல பெயரும் பெற்றிருந்த ஒரு நாட்டு வைத்தியரை அழைத்து வந்தேன். அவர் நாடி பிடித்துப் பார்த்தார். பின் பச்சை நிறமுள்ள ஒரு தைலத்தைக் குழந்தையின் கை கால்களில் உள்ளங்கைகளினால் தடவிச் சூடு பறக்கத் தேய்த்தார். ஏதோ ஒரு செந்துாரப் பொடியைத் தேனில் குழைத்துக் கொடுக்கும்படி சொன்னார்.

அவரை வாசல்வரை கொண்டு போய் விட்டு வழி அனுப்பியபின் ஒன்றும் தோன்றாமல் வாசற்படியிலேயே நின்றேன். தெருவில் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்."சார் குழந்தைக்கு இப்ப எப்படி இருக்கு? தேவலையா?” - குரல் கேட்டுத் திரும்பினேன். பக்கத்து வீட்டுக்காரர் தம்முடைய வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.

“எப்படி இருக்கு?”

"அப்படியே தான் இருக்கு! வைத்தியர் வந்து ஏதோ தைலத்தைத் தேய்த்தார். உள்ளுக்கும் மருந்து கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். குழந்தைக்கு இன்னும் பிரக்ஞைதான் வரவில்லை.”

“அடடா! என்ன கஷ்டம் உங்களுக்கு? ஒரு நாளாவது நீங்கள் நிம்மதியா இருக்க முடியறதில்லே. சனியன் பிடிச்ச வீடு குடி வந்த நாளிலிருந்து உங்களைப் பாடாய்ப் படுத்துகிறது."

“நம்ம கஷ்டத்துக்கு வீடு என்ன செய்யும்?.”

“அதென்ன அப்படி அலட்சியமாகச் சொல்லிட்டீங்க! இதிலெல்லாம் உண்மை இருக்கு சார். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்றேன்.”

அடுத்த வீட்டுக்காரர் நிறுத்துகிற வழியாகக் காணோம். நான் அவருடைய அனுபவத்தை மேலும் கேட்டுக் கொண்டிருக்கத் தயாராக இல்லை.

“நான் வரேன் சார் உள்ளே காரியம் இருக்கு."

"ஆமாம்!ஆமாம்! போய்ப் பக்கத்திலிருந்து குழந்தையைக் கவனியுங்கள். எதற்கும் நான் சொன்ன விஷயத்தைக் கொஞ்சம் யோசனை பண்ணிக்குங்க வேறே வீடு.”

நான் உள்ளே வந்துவிட்டேன். நின்று கொண்டே இருந்தால் அவரும், பேசிக்கொண்டேதான் இருப்பார்.

“என்ன ராஜம்? குழந்தைக்கு எப்படி இருக்கு”