பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மூட நம்பிக்கை ★ 67



இப்படி சுபாவமாக என்னிடம் கேட்டதிலிருந்தே இதை நான் புரிந்து கொண்டேன். “தாராளமாகக் கூட்டிக் கொண்டு போங்கள்” என்று சுபாவமாகவே பதிலும் சொல்லிவிட்டேன். காலையிலிருந்தே அப்பாவும் மகளுமாகப் பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்யத் தொடங்கிவிட்டார்கள். நான் அதை கவனித்தும் கவனிக்காதவன்போல் ஆபீஸூக்குக் கிளம்பிவிட்டேன். எனக்கு வேறு ஒரு வேதனையும் சேர்ந்திருந்தது. முதல்நாள் மாலையிலிருந்து குடலைப் புரட்டிப்புரட்டி எடுத்தது! வலி தாங்க முடியவில்லை. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் 'விதியே’ என்று சகித்துக் கொண்டிருந்தேன். குடலின் மெல்லிய தசையில் ஊசியை 'நறுக் நறுக்’ கென்று குத்தி எடுப்பது போல வலித்தது.

வழக்கமாக என் வீட்டுக்கு வருகிற டாக்டரைத் தேடி ஒடினேன். நல்லவேளை! டாக்டர் ‘டிஸ்பென்சரி’யில் தான் இருந்தார்.

நிலைமையை டாக்டரிடம் சொன்னேன்.

"புகையிலைப் பழக்கம் உண்டா?”

“உண்டு!”

“அடிக்கடி காப்பி சாப்பிடுவீர்களா?”

"ஆமாம்!”

"அப்படியானால் இது அல்ஸர் (குடற்புண்) ஆகத்தான் இருக்க வேண்டும்.”

“அல்ஸரா? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள் டாக்டர்”

"சந்தேகம் எதற்கு? எக்ஸ்-ரே எடுத்தே பார்த்து விடுகிறேன்.”

எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது.

"படம் நாளைத் தெரியும். நீங்கள் இப்போதைக்கு இந்த மருந்தைச் சாப்பிடுங்கள். வீட்டிற்குப் போய்ப் பூர்ண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். காரமாக எதையும் சாப்பிட வேண்டாம். சூடும் ஆகாது. உடம்பை அலட்டிக் கொள்ளாமல் படுக்கையில் படுத்திருங்கள்.”

டாக்டர் கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.

“மிஸ்டர். ஒரு நிமிஷம்! உங்களை ஒன்று கேட்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்களே?’ புறப்படும்போது டாக்டர் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு இப்படிக் கேட்டார்.

“என்ன டாக்டர்?”

“ஒன்றுமில்லை. இந்த வீட்டிற்குக் குடி வந்ததிலிருந்து உமக்கோ, குழந்தைக்கோ, மனைவிக்கோ, ஏதாவது வந்து கொண்டே இருக்கிறதே? வீட்டில் ஏதாவது ‘தோஷம்’ உண்டோ?”


"என்ன டாக்டர் நீங்கள் கூடவா இதை எல்லாம் நம்புகிறீர்கள்? மனுஷனுக்கு உடம்புக்கு வந்தால் அதற்கு வீடா பழி?”