பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை எப்போதுமே உண்டு! உடனே வேறு வீடு மாற்றிவிடுமே ஐயா! அதில் உமக்கென்ன கஷ்டம்”

“பார்க்கிறேன் டாக்டர்.”

“பாரும் அதுதான் நல்லது. எனக்கு அன்றே உம்மைக் கேட்க ஆசை. நீர் இங்கே வந்து முழுசா அரைவருஷம் ஆகலே! அதற்குள் நோய் அதிகமானால் எனக்கு லாபம்தான். அதுக்காக...” டாக்டர் சிரித்துக்கொண்டார்.

நான் வீட்டுக்கு வந்தேன். சுருட்டிப் போர்த்துக்கொண்டு படுக்கையில் படுத்துவிட்டேன். குடல் வலி, வாயைத் திறந்து அலறவேண்டும் போல் தோன்றியது. பொறுத்துக்கொண்டேன். ராஜத்தின் பிரயாணம் தடைப்பட்டு விட்டது. அவள் எனக்கு என்னவோ, ஏதோ என்று பதறிவிட்டாள். மாமனாரும் அதே நிலையை அடைந்தார். விடிய விடிய என் அருகே தூக்கம் விழித்து உட்கார்ந்து கொண்டிருந்தாள். ஆனால் ஒரு தரமாவது வீடு மாற்றும் பேச்சை எடுக்கவில்லை. மாமனார்தான் இரண்டு மூன்று தடவை சொல்லிவிட்டார்.

“மாப்பிள்ளை லார்! முதலில் இந்த நாசமாய்ப்போகிற வீட்டைக் காலி பண்ணிவிட்டு மறுவேலை பாருங்கள். வந்ததிலிருந்து ஒருவருக்காவது சுகம் கிடையாது” என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.

என் வியாதியை நாலைந்து நாளில் குணப்படுத்திவிட்டார் டாக்டர். இதையெல்லாம் விடப்பெரிய ஆச்சரியம் அந்த ஐந்து நாட்களில் மறந்தும்கூட ராஜம் வீட்டைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. என் பிடிவாதம் தான் கரைந்து போயிருந்தது. பொய்யோ, மெய்யோ, இந்த வீடு நமக்கு இனி ஒத்து வராது என்கிற மாதிரி ஒருணர்வு எனக்குள் மெல்லக் கிளை விட்டுப் படர்ந்து கொண்டிருந்தது!

அப்போது சாயங்காலமாகியிருந்தது. முதல்நாள் மாமனார் ஊருக்குப் போய்விட்டார். "

“ராஜம் புறப்படுகிறாயா? போகலாம்!”

“எங்கே? நான் எதற்காக வரவேண்டும்?”

"அடுத்த தெருவில் நல்ல வீடு ஒன்று வாடகைக்குக் காலியாக இருக்கிறதாம்.”

“என்ன! பேசுகிறது. நீங்கள்தானா? என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லையே?”

“கேலி பண்ணாதே நேரமாகிறது, புறப்படு ராஜம்”

"வீடு என்ன செய்யும்? இதெல்லாம் சுத்த அசட்டுத்தனம்”

"இன்னும் கேலி பண்ணினால் எனக்குக் கோபம் வரும்!” நான் அதட்டினேன். அவள் புடவை மாற்றிக் கொண்டு கிளம்பினாள். எல்லாம் உடனடியாகவே முடிந்துவிட்டன.அன்றே புது வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டுத்தான் திரும்பினோம்.

(கலாவல்லி, மார்ச், 1957)