பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



டிரைவர் என்னை விழித்து விழித்துப் பார்த்தான். வாயால் சொல்லிக் காட்ட முடியாததைக் கண்களால் நிறைவேற்றிக் கொண்டிருந்தான் அவன். யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட மாதிரி ஆகிவிட்டது என் நிலை

“இது என்னாப்பா சனியன் பிடித்த மழை? பிரளயத்துக்கு வர்ஷிக்கிறது போலப் பொழிந்து தள்ளுகிறதே! என்ன வந்தாலும் சரியென்று இப்படியே ஜீப்பை ஒட்டிக் கொண்டு கிளம்பிவிட்டால் என்ன?”

"நடக்கிற காரியமாப் பேசுங்க.இந்த மழையிலே ஜீப் நின்ற இடத்திலேயிருந்து ஒரு அங்குலம்கூட நகராது. மலை ஓடைகளிலே தண்ணீர் கரை நிமிர ஒடிக் கொண்டிருக்கும். ரோடு தண்ணீர் அரித்து மேடும் பள்ளமும், சேறும் சகதியுமாக இருக்கும். இந்த நிலையிலே இனிமேல் ஒன்றும் செய்வதற்கில்லை”

“என்னப்பா பெரிய குண்டாகத் தூக்கிப் போடுகிறாயே, பசியும் பட்டினியுமாக இரவு முழுவதும் இந்த நட்ட நடுக்காட்டில் ஒட்டைத் தகரக் கொட்டகையிலா தங்கியிருக்க வேண்டும்? இது துஷ்டமிருகங்கள் பழகுகிற இடமாயிற்றே?”

“நான் சொன்னேனே, நீங்கள் கேட்டீர்களா? போய்த்தான் ஆகவேண்டுமென்று ஒன்றைக் காலிலே நின்றீர்கள். புறப்பட்டு வந்தாயிற்று. இனிமேல் வருவதை அனுபவிக்க வேண்டியதுதான்.”

அவன் தன் ஆத்திரத்தைப் பேசித் தீர்த்துக் கொண்டான்.

நான் தகரக் கொட்டகை வாசலில் வந்து பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே இருளின் ஆட்சி. தங்களுக்கும் இருளுக்கும் அதிக வேறுபாடின்றித் தொலைவில் கருநீல மலைச்சிகரங்கள் இருளோடு இருளாக ஐக்கியப்பட்டிருந்தன. மலைப்பகுதியில் சாதாரணமாகவே ஐந்து ஐந்தரை மணிக்கே இருண்டுவிடும். மழை மூட்டத்தினால் அப்போது மணி ஏழுகூட ஆகாமலிருந்தும் இருள் கனத்துப் போயிருந்தது. ஜீப்பின் அருகே நெருங்கிப்பார்த்தேன்.உட்காருகிற ஸீட்டுகள் உட்பட எல்லாம் சொட்ட நனைந்து போயிருந்தன.

ஜீப்பின் முன்புறத்து ஸீட்டை உற்றுப் பார்த்தவன் சட்டென்று திடுக்கிட்டுப் போய், நாலடி பின்னுக்கு நகர்ந்தேன். பயம் மனத்தைக் கவ்வியது. மயிர்க்கால்கள் மேலே எழும்பிக் குத்திட்டன.

"ஏய் டிரைவர் இங்கே வா, அந்த டார்ச் லைட்டை இப்படிக் கொண்டா, இது என்னவென்று பார்ப்போம்!” என் குரல் நடுக்கத்தினால் மிரண்டு குழறிப் போயிற்று.

“என்னது? என்ன, அங்கே? இதோ வந்துவிட்டேன்!” டிரைவர் ஓடிவந்தான். நடுங்கும் கைகளால் அவனிடமிருந்த டார்ச்சை வாங்கினேன்.

ஸ்விட்சை அமுக்கக் கைவிரல் தயங்கியது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அமுக்கினேன். 'டார்ச்’ ஒளிவட்ட வடிவமாக முன் சீட்டில் விழுந்து பரவியது.

அப்பாடா நல்லவேளை நான் நினைத்துப் பயந்தது போல எந்தத் துஷ்ட மிருகமும் வண்டிக்குள் ஏறிப் படுத்திருக்கவில்லை. மனித உருவம்தான் முகம்