பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நல்லதோர் வீணை செய்து ★ 71



தெரியாமல் இழுத்துப் போர்த்து வெள்ளைப் போர்வையால் மூடிக் கொண்டு மழைக்கு அடக்கமாக ஜீப்பின் முன் ஸீட்டில் சுருண்டு முடங்கியிருந்தது. அதைப் பார்த்த பிறகுதான் எனக்கு நிதானமாக மூச்சு வந்தது. படுத்துக்கிடந்த விதத்தைப் பார்த்தால் கைகளில் வேறு எதோ ஒரு பையையோ, மூட்டையையோ, அணைத்துக் கொண்டிருந்த மாதிரியும் இருந்தது.

“இந்தா ஐயா! எழுந்திரு. ரோட்டிலே ஏதாவது வண்டி நின்று கொண்டிருந்தால் யாருடையதென்று கேட்காமல் நீ பாட்டுக்கு ஏறிப் படுக்கலாமா? எழுந்திரு ஐயா, எழுந்திரு!” வெள்ளைப் போர்வையின்மேல் ஓங்கி ஒரு தட்டுத் தட்டினார் டிரைவர்.

குபீரென்று வாரிச் சுருட்டிக் கொண்டு ஒரு இளம் பெண் எழுந்திருந்தாள்.அவள் கையில் ஒரு குழந்தை எங்கள் இருவருக்குமே ஆச்சரியம் நிலை கொள்ளவில்லை. எவனாவது ஒரு எஸ்டேட் கூலி குளிருக்கு அடக்கமாக முடங்கியிருப்பான் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்தோம்.

அந்த நேரத்தில் அந்த மலைக்காட்டில் இப்படி ஒரு நிகழ்ச்சியை யார்தான் எதிர்பார்க்க முடியும்? பதறி நடுங்கிக் கொண்டே குழந்தையும் கையுமாகக் கீழே இறங்கி நின்றாள் அவள். குளிரில் உதறும் மணிப்புறாவின் அழகிய மென்மையான சிறகுகளைப் போல அவள் பூவுடல் நடுங்கியது.

மழை குறைந்து மெல்லிய சாரலாக விழுந்து கொண்டிருந்தது. கல்யாண வீட்டில் பன்னீர் தெளிக்கிறமாதிரி, எதிர்பாராத நிகழ்ச்சியால் எதைப் பேசுவது, முதலில் யார் பேசுவது, எப்படிப் பேசுவது என்று எதுவும் தோன்றாமல் மூன்று பேரும் நனைந்து கொண்டே சில விநாடிகளாவது நின்றிருப்போம்.

திடீரென்று வெளிக்காற்றும் மழைத் துளியும் பட்டு உறைக்கவே குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்துவிட்டது. டிரைவர் குனிந்த தலை நிமிர்வேயில்லை.நான் சமாளித்துக் கொண்டேன். குழந்தையின் அழுகை எனக்கு நிதானத்தைக் கொடுத்துவிட்டது.

டார்ச் ஒளியை அவள் முகத்துக்கு நேரே பாய்ச்சினேன். அழகிய முகம். கோவிலிலுள்ள அம்மன் சிலைபோல் அவள் அழகு ஒருவிதமான பயத்தையும் உண்டாக்கியது. மஞ்சள் கொன்றை நிறம். மிரண்டு பாயும் விழிகள். தந்தத்தில் செதுக்கினாற்போன்ற நாசி வட்ட முகத்தில் சுருள்சுருளாகக் கேசம் புரளும் நெற்றி. இயற்கையாகவே சிவந்த ரோஜா இதழ்கள். விளக்கொளியில் நான் அவளையே பார்ப்பதைக் கண்டு அவள் தலையைச் சாய்த்தாள். விழிகள் தரையை நோக்கின. குழந்தையும் அழகாகத்தான் இருந்தது. கழுத்துவரை போர்த்தியிருந்தாள். இருட்டில் 'டார்ச்சின்’ சிறிய ஒளியில் முகத்தோற்றத்தை மட்டுமே கொண்டு அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று அனுமானிக்க இயலவில்லை.

“மழையில் நனைந்துகொண்டே நிற்கிறாயே, குழந்தைக்கு மழைத் தண்ணீர் ஆகாது. இதோ இப்படி இந்தத் தகரக் கொட்டகைக்கு வா...” நான் தயங்கித் தயங்கித்தான் வார்த்தைகளை வெளியிட்டேன்.