பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



"இல்லை, ஐயா! உங்கள் காரில் படுத்துக் கொண்டதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். நான் மட்டுமானால் எப்படியாவது நனைந்து கொண்டே போயிருப்பேன். குழந்தைக்காகத்தான் காரில் ஏறி முடங்கினேன். இப்போது மழை குறைந்துவிட்டது. நான் போய்விடுகிறேன்.” குரல் அழகுக்கேற்ற இனிமை நிறைந்துதான் இருந்தது.

"இரு அம்மா இரு! நீ யார்? எங்கிருந்து வந்தாய்? எங்கே போகிறாய்? இந்த மலைக்காட்டில் மழை இருட்டில் எப்படிப் போவாய்? தனி ஆளாகச் சின்னஞ்சிறு குழந்தையையும் எடுத்துக் கொண்டு இந்த மழை நேரத்தில் கிளம்பியதே தவறு. யானையும், புலியும் சர்வசாதாரணமாக நடமாடுகிற இந்தப் பிரதேசத்தில், ஒரு சிறு வயசுப் பெண் பச்சைக் குழந்தையோடு தனியே போவதற்குத் துணிந்தால் என் மனம் அதை ஒப்புக்கொள்ள மாட்டேனென்கிறதே?”

"ஐயா! நீங்கள் கேட்பதையேதான் நானும் என் மனதைக் கேட்கிறேன்."எங்கிருந்து வந்தேன்? எங்கே போகிறேன்? எதற்காகப் போகிறேன்? ஏன் தனியாகப் போகிறேன்?” பதில்தான் தெரியவில்லை”

"அம்மா! உன்னைக் கண்டால் ஏதோ மனக் கஷ்டமடைந்து வீட்டுக்காரரோடு மனஸ்தாபப்பட்டுக் கொண்டு வந்ததுபோல் தோன்றுகிறது. என்னையும் இந்த டிரைவரையும் உன்னுடைய சகோதரர்களாக நினைத்துக் கொண்டு உன்னைப் பற்றிய விவரங்களைச் சொல். எங்களால் உனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமானால் மகிழ்ச்சியோடு செய்ய சித்தமாயிருக்கிறோம். வா அம்மா.. மழையில் நனைந்து கொண்டு நிற்காதே. உள்ளே போய்ப் பேசுவோம். தகரக் கொட்டகையில் மழை ஜலம் ஒழுகினாலும் உள்ளே மூன்று பேர்கள் உட்காரலாம்.”

அந்தப் பெண் ஒரு கணம் எங்கள் இருவரையும் உற்றுப் பார்த்தாள். பார்வையா அது? மனத்தின் ஆழத்தை முகத்திலிருந்து ஊடுருவித் தெரிந்து கொள்ள முயலும் துாண்டில்! எங்கள் நாணயத்தைக் கண்களாலேயே பரிசோதிக்கிறாள் போலிருந்தது.

"ஐயா! உங்கள் இருவருக்கும் மிக நன்றி. என்னிடம் உங்களுக்குச் சொல்லுகிறாற்போல பெரிய விஷயம் ஒன்றுமில்லையே? உங்கள் கருணைக்கும் அநுதாபத்துக்கும் நானும் இந்தக் குழந்தையும் தகுதியற்றவர்கள்.தயவுசெய்து என்னை நான் போக வேண்டிய வழியில் போவதற்கு அனுமதியுங்கள்.”

தொலைவில் யானைகள் பிளிறும் ஒலி பயங்கரமான இருளில் எதிரொலித்தது. காற்றில் மரங்கள் பேய் பிடித்து ஆடுபவைபோல் ஆடிக்கொண்டிருந்தன.இலேசாகத் தூறிக் கொண்டிருந்த சாரலும் நின்றுவிட்டது. மழையின் பங்கையும் சேர்த்துக்கொண்டு காற்று விசுவரூபம் எடுத்திருந்தது. மரக்கிளைகள் உரசும் ‘மர்மர' சத்தமும், காட்டுமிருகங்களின் ஓலமுமாகச் செவிகள் அதிர்ந்தன. குழந்தையும் அழுகயை நிறுத்தவில்லை. அந்தப் பெண்ணும் இடத்தை விட்டு நகரவில்லை.

“சொன்னால் கேள், அம்மா! நீ அவசரமாகப் போக வேண்டுமானால் ஜீப்பிலே கொண்டு போய் விடுகிறோம். தனியாக இந்த மலைப்பாதையில் இப்படிப்பட்ட