பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி ! நல்லதோர் வீணை செய்து ★ 73



வேளையில் குழந்தையோடு நடந்து போகக்கூடாது. வழியில் எவ்வளவோ அபாயங்கள் நிறைந்திருக்கின்றன.”

அந்தப் பெண் இரைந்து சிரித்தாள். கலகலவென்று வெளிப்பட்டது சிரிப்பு. ஆனால் அதில் ஏதோ உட்பொருளும் கலந்திருந்தது.

“போக வேண்டிய இடம்.? நான் இனிமேல் போக வேண்டிய இடம்தானே? அதை... அதை நீங்களா கேட்கிறீர்கள்? அது உங்களுக்குத் தெரியத்தான் வேண்டுமா? வீணாக என்னை ஏன் இப்படி இங்கே நிறுத்தி வைத்துக்கொண்டு கஷ்டப்படுத்துகிறீர்கள்?”

“ஜீப்பிலேயே கொண்டுபோய் விட்டுவிடலாமே என்றுதான் கேட்டோம். வேறு ஒன்றுமில்லை!”

"ஐயா! நான் போகிற இடத்துக்கு ஜீப்பில்தான் போகவேண்டும் என்ற அவசியமில்லையே! நடந்தும் போகலாம்; நடக்காமலும் போகலாம். ஒடியும் போகலாம், ஓடாமலும் போகலாம், இருந்த இடத்திலிருந்தேகூடப் போக முடியுமே அந்த இடத்துக்கு”

"அம்மா நீ ஏதோ மனவியாகூலத்தில் பேசுகிறாய். உள்ளதை உள்ளபடி எங்களிடம் சொன்னால் தேவலை”

“நான் எங்கேயோ எப்படியோ தொலைந்து போகிறேன்; நீங்கள் யார் அதைக் கேட்க?” என்றாள் வெறிபிடித்தவள் போல.

“முடியாது! இப்போது உன்னை விட்டுவிட்டால் நீ ஏதாவது ஏடாகூடமாகச் செய்து கொள்வாய். எனக்குத் தெரிந்து இரண்டு உயிர்கள் போவதை நான் சிறிதும் விரும்பவில்லை.”

“...”

அவள் பதில் சொல்லவில்லை. பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள். டிரைவர் ஜீப் அருகில் போய் அதைச் சரி பார்த்துக்கொண்டிருந்தான். கார் இயந்திரங்கள் மழையால் கெட்டுவிட்டதா, இல்லையா? அப்போதே அதில் புறப்பட முடியுமா? என்று அவனுக்குக் கவலை!

இந்த நிலையில் திடீரென்று பாதையின் தென் பகுதியிலிருந்து ஒரு பெரிய லாரி வேகமாக வருவது தெரிந்தது. அதன் ஹெட்லைட் வெளிச்சம் எங்களைக் கவர்ந்தது. மூன்று பேர்களுமே அதனால் கவரப்பட்டுத் தெற்குப் பக்கம் திரும்பினோம்.

"ஐயோ! அவர்தான் போலிருக்கிறது. அடபாவிகளா நானாகச் சாவது பொறுக்காமல் நீங்கள் வேறு துரத்திக் கொண்டு வந்துவிட்டீர்களா?” அந்தப் பெண் அலறினாள். நானும் டிரைவரும் அவள் கூறியவற்றைக் கேட்டுத் திடுக்கிட்டு அவள் பக்கம் திரும்பினோம்.

"ஐயா! காப்பாற்றுங்கள் ஐயா என்னையும் என் குழந்தையையும் கொல்ல வருகிறார்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். முன் போலவே நானும் குழந்தையும்