பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நல்லதோர் வீணை செய்து ★ 75



கொண்டு குழந்தை முனகி அழுகின்ற சத்தம் மெல்லக் கிளம்பிற்று. உடனே எனக்குப் பகீரென்றது.

“அங்கென்ன? ஜீப்புக்கள் குழந்தை முனகுகிற சப்தம் கேட்கிறதே?” என்று கேட்டுக் கொண்டே அந்த லாரி டிரைவரும் அவனோடு வந்த முரட்டு ஆட்களும் பின் ஸீட்டை நோக்கிப் பாய்ந்தனர்.

எனக்குச் சர்வநாடியும் ஒடுங்கிவிட்டது. இந்த நெருக்கடியான சமயத்தில் என்னைக் காப்பாற்ற முன் வந்தான் டிரைவர். அவர்களுக்கு முன்னாலே பாய்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்தி,"ஐயா சம்சாரம் படுத்திருக்கிறாங்க. சுற்றிப் பார்க்க வந்த இடத்திலே குழந்தைக்குக்குளிர் ஜூரம், கூதலடிக்காமலிருக்கக் கித்தானைப் போர்த்திப் படுத்திருக்காங்க குழந்தை ஜுரத்தைப் பொறுக்கமாட்டாமல் முனகுது” என்று என்னைச் சுட்டிக் காட்டினான். எனக்கும் தன் தந்திரத்தைக் கண் ஜாடையினாலே தெரிவித்தான்.

“சரி, நீங்க சொன்னால் போதும். எங்க ஆத்திரம் நாங்கள் தேடி அலையறோம். பாவிப் பெண், ஒரு தோட்ட முதலாளியைக் கத்தியாலே குத்தி விட்டு ஒடி வந்துவிட்டாள். அதுதான் அப்போதிலிருந்து லாரியை எடுத்துக் கொண்டு தேடி அலைகிறோம்” என்று கூறிவிட்டு அவர்கள் திரும்பிப் போய் லாரியில் ஏறிக் கொண்டனர். லாரி புறப்பட்டது. அந்த லாரி டிரைவர் போகிற போக்கில் கூறிவிட்டுப் போன செய்தியைக் கேட்டவுடன் எங்கள் இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. அப்படியே உச்சந்தலை படீரென்று வெடித்துவிடும் போலிருந்தது.

அதற்குள் போர்வையைப் பற்றிக் கொண்டு குழந்தையோடு இறங்கிய அவளிடம், “என்னம்மா, இது? அவங்க சொல்லிவிட்டுப் போகிறது நிஜம்தானா?.” என்று திகைப்புடன் கேட்டேன்.

"நிஜம்தான்... சந்தர்ப்பம் என்னை அப்படிச் செய்ய வைத்துவிட்டது!”

“என்ன? ஒரு ஆளைக் குத்திக் கொலை செய்துவிட்டா ஒடி வருகிறாய்?”

"ஐயா! நீங்கள் சகோதரிகளோடு பிறந்த மனிதர் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் சற்றுமுன் நீங்கள் கூறியதுபோல் உங்கள் சகோதரியாக நினைத்துக் கொண்டு நான் சொல்லப்போவதை நம்பிக்கையோடு கேளுங்கள். கேட்டபின்பாவது நான் என் நிலையில் அப்படிச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!” என்றாள் அவள்.

“டிரைவர்! சீக்கிரமாக ரிப்பேரை முடி.. ஊரார் வம்பெல்லாம் நமக்கு எதற்கு? யார் கதையையும் நாம் கேட்க வேண்டாம். நீ வண்டியைக் கிளப்புவதற்கு வழி செய்! ஊருக்குப்போகலாம்.”அந்தப் பெண்ணிடம் ஒருவிதமான வெறுப்பும் அருவருப்பும் திடீரென்று எனக்கு ஏற்பட்டன.

என்னுடைய இந்தத் திடீர் மாற்றத்தை அவள் புரிந்து கொண்டாளோ, இல்லையோ? பேசுவதை நிறுத்திவிட்டாள். டிரைவர் வண்டிக்கு அடியில் படுத்து