பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நல்லதோர் வீணை செய்து ★ 77



பத்திரிகைகளில் விளம்பரம் செய்து கொள்ளலாம்” என்ற தீர்மானத்துடன் இருவரும் கிளம்பினோம்.

யார் செய்த புண்ணியமோ? அந்த இருளில், அவ்வளவு பயங்கர மழை பெய்து முடிந்தபிறகு, குறுகியமேடுபள்ளம் நிறைந்த மலை ரஸ்தாக்களில் ஒரு துன்பமுமின்றி ஜீப் மலை அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தது. 'குழந்தை தூக்கம் கலைந்து அழுதால் சமாதானப்படுத்த முடியாதே' என்று கவலைப்பட்டோம். நல்லவேளையாக ஊர் வருவதற்குள் குழந்தை தூக்கத்திலிருந்து ஒருதடவைகூட விழித்துக் கொள்ளவே இல்லை.

ஊர் வந்து சேர்ந்தபோது இரவு ஒன்றரை மணி. இரண்டாவது ஆட்டம் சினிமா விடுகிற நேரம். டிரைவர் காலையில் வருவதாகக் கூறிவிட்டுத் தன் வீட்டுக்குப் போனான். நான் என் மனைவியை அழைத்துச் சுருக்கமாக அந்தக் குழந்தையின் வரலாற்றை அவளுக்குச் சொல்லி அதை அவளிடம் கொடுத்தேன்.

அவள் குழந்தையைத் தோளில் சாத்திக்கொண்டு சமயலறைக்குள் போனாள். நான் வருகிற வழியிலேயே ஒரு சினிமாக்கொட்டகை வாசலில் இருந்த ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்திருந்தேன்.

"குளுகோஸைப் போட்டுக் குழந்தையை அழாமல் தூங்கப் பண்ணு” என்று அவளை எச்சரித்துவிட்டுப் படுக்கச் சென்று விட்டேன் நான். அலைச்சலும் மனக்குழப்பமும் மிகுந்து ஓய்ந்திருந்த உடல் விரைவில் தூக்கத்தின் வசப்பட்டது.

மறுநாள் காலை எழுந்திருக்கும்போது ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது.

"குழந்தை ரொம்பச் சமர்த்தாக இருக்கே? அழுகை, முரண்டு ஒண்னும் கிடையாது! காலையிலே எழுப்பிப் பால் காய்ச்சிப் புகட்டினேன். புது முகம்னு கொஞ்சமாவது சிணுங்கணுமே? பெற்ற குழந்தை மாதிரி ஒட்டிக் கொண்டுவிட்டது!” இடுப்பில் அந்தக் குழந்தையும் கையில் காப்பி தம்ளரும் காட்சியளிக்க என் மனைவி என்னை நோக்கி வந்தாள்.

“எப்படியானால் என்ன? திருமூர்த்தி மலைக்குப் போய் விட்டு இப்படி ஒரு குழந்தையோடு வருவேன் என்று நீ கனவில்கூட நினைத்திருக்கமாட்டாய்”

"எல்லாம் நாம் நினைக்கிறபடி நடக்கிறதா என்ன?” குழந்தையை ஆசைதீரக் கொஞ்சிக்கொண்டே காப்பித் தம்ளருடன் திரும்பிப் போனாள் அவள்.

நான் அன்றைக்கு ஆபீஸ்போகவில்லை.லீவு போட்டுவிட்டேன்.பதினொன்றரை மணி சுமாருக்கு டிரைவர் வந்து சேர்ந்தான்.

“வாப்பா! வா. குழந்தை அம்மாவிடம் எவ்வளவோ நாள் பழகினாப்போல இருக்கிறது. அழவே இல்லை. 'போட்டோ’ பிடித்து எல்லாப் பத்திரிகையிலும் விளம்பரம் போட்டு விடுவோமா? அவளுக்குத் தெரிந்தவர்கள் யாராவது பத்திரிகை பார்த்துச் சொன்னால் அதைக் கேட்டு இங்கே வரமாட்டாளா? வந்தால் குழந்தையைக் கொடுத்து அனுப்பிவிடுவோம்”