பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா.பா.வின் முன்னுரை

கதாசிரியனின் சிந்தனையில் பிறந்து வாசகனின் சிந்தனையில் நிறைவு பெறுவதுதான் சிறுகதை என்று எனக்குத் தோன்றுகிறது. சில சமயம் கதாசிரியனின் நினைவு வித்து வாசகனின் மனத்திற் புகுந்தும் நிறைவு பெற்றுவிடாமல் வளர்வது உண்டு. கதைக்கு மையமான கருத்து எதுவோ அதன் சிந்தனை வளர்ச்சியையும், வலுவையும் பொறுத்ததுஅ து. கதைகளின் அழகோ, வளமோ, சிந்தனையோ, எதுவானாலும் அது சங்கமமாகும் இடம் வாசகர் சிந்தனையே.

எனது இந்தத் தொகுதியுள் அமைந்த கதைகள் வாசகர் மனத்தில் சங்கமமாகும் போது என்னென்ன உணர்வுகள் கிளருமோ அவை என்னால் எழுபவை, அவை நல்லனவாகுக.

இந்தச் சிறுகதைகள் தமிழ் வாசகர்கள் மனங்களில் வலுவான சிந்தனைகளை நிறைத்தாலும் சரி, வளர்த்தாலும் சரி- அவற்றுக்காக இவற்றை உருவாக்கியவன் பெருமிதம் அடைய முடியும். அப்படி அடையலாம் அல்லவா? கற்பனை இலக்கியம் படைக்கும் எழுத்தாளனின் மனத்தில் பூக்கும் உணர்ச்சி மலர்களில் உதிர்ந்து மடிந்துவிடுவன சில. பிஞ்சுவிட்டுக் காய்த்துக் கனிந்து கனிகளாய்ச் சுவை நல்குவனவோ மிகவும் சில. ஒரு நல்ல சிறுகதையில் பல நல்ல சிறுகதைகளுக்கான வித்துக்கள் பொதிந்திருக்க வேண்டும். பழத்தின் உள்ளீடாகிய வித்துக்களைப்போல் நல்ல சிறுகதைக்கு இந்த உள்ளீடு இன்றியமையாதது.

போட்டோ ஆல்பத்தைப் பேணும் புகைப்படக் கலைஞனைப் போல உலகத்துக் காட்சிகளின் பல்வேறு உயிர்ப் படங்களைத் தன் மனமாகிற ஆல்பத்தில் சேர்த்து வைத்துக் கொண்டு சிந்திக்கிறவன் எழுத்தாளன்.

இங்கே தொகுக்கப்பட்டுள்ள இந்தச் சிறுகதைகளின் படைப்பாளியாகிய நான் இப்போது விலகி நின்று இவற்றைப் பார்க்கிறேன். என்னுடைய கண்களும், மனமும் எண்ணங்களும் உலகத்தைக் கண்டு, கற்று, உணர்ந்து கொண்ட எத்தனையோ உண்மைகளைக் கதையாக்கிவிடத் துடித்தேன். சில கதைகளாயின; சில கனவுகளாயின. இன்னும் சில நினைவுகளாகவே தங்கிவிட்டன.எரிகிற தீபத்திலிருந்து குறைவது தெரியாமல் எண்ணெயைத் திரி உறிஞ்சிக் கொண்டு எரிகிற மாதிரிப் பிரபஞ்ச வாழ்க்கை என்று என் கண்களுக்கு முன் எந்தப்பேரியக்கம் நடந்து கொண்டிருக்கிறதோ அதிலிருந்து