பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“எதற்கும் நாளை ஒருநாள் பார்த்துவிட்டுச் செய்யலாமுங்க! எனக்கென்னவோ அவள் உயிரோடு இருப்பாள் என்கிற நம்பிக்கையே இல்லீங்க”

கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான் அவன்.

மறுநாள் பத்திரிகையில் அந்தச் செய்தியைப் படித்தபோது திடுக்கிட்டேன். வியப்பும் வேதனையும் ஒருங்கே அடைந்தேன்.

“மூணாறில் சோத்துப் பாறை எஸ்டேட் அருகே இளம்பெண் தற்கொலை, ஏற்கனவே அவள் போலீஸாரால் தேடப்பட்டுக் கொண்டிருந்தவளாம். அவளுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உண்டென்றும், அவள் வேலை பார்த்து வந்த எஸ்டேட் முதலாளி அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதனால் அவரைக் குத்திக் கொலை செய்துவிட்டுத் தன் குழந்தையோடு ஒடிய அவள் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டுவிட்டாள் அவள் குழந்தை என்ன ஆயிற்றென்று தெரியவில்லை, போலீஸார் புலன் விசாரித்து வருகின்றனர்.”

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் உட்கார்ந்தேன்.

"பத்திரிகையைப் படித்தீர்களா? விளம்பரத்துக்கு அவசியமே இல்லை! குழந்ை இங்கேயே வளரட்டும்” என்று கூறிக் கொண்டே வந்தான் டிரைவர்.

"இதோ பாருங்கள். குழந்தை என்ன அழகாகச் சிரிக்கிறது? 'அம்மா’ என்றே என்னைக் கூப்பிடுகிறது!” என் மனைவி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள். குழந்தை உலகத்தையெல்லாம் விலையாகக் கொடுத்தாலும் ஈடு காணாத அழகுச் சிரிப்பு ஒன்றைத் தன் சின்னஞ்சிறு மாதுள இதழ்களில் சிந்திக் கொண்டிருந்தது. டிரைவர் அதையே பார்த்துக்கொண்டு இருந்தான்.நான் எதிரேசுவரில் மாட்டி இருந்த சர்வேசுவரனின் படத்தைப் பார்த்தேன்.

‘இறைவா! நீ நல்ல வீணைகளைப் படைக்கிறாய். மண்ணுலகம் தாங்காத அழகையெல்லாம் உருவாக்கி அனுப்புகிறாய்! சேற்றில் செந்தாமரை! குப்பையிலே குருக்கத்தி! ஆனாலும் என்ன பயன்? அந்தநல்ல வீணைகளைச் சில சமயம் நலங்கெடப் புழுதியிலும் எறிந்துவிடுகிறாயே!’ என்று என் மனம் இறைவனை இறைஞ்சிக் கேட்டது.

(கல்கி, 10.3.1957)