பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. உனக்கு மட்டும்

ழனிமலையில் கோவிலுக்கு வெளியே தென்புறத்துப் பிராகாரத்தில் உட்கார்ந்து யோசனையில் மூழ்கியிருந்தேன். பின்புறம் கொடைக்கானல் மலைத் தொடர் நீலக் காரிருளின் நடுவே பனியிலும் மேகத்திலும் நெய்த வெண்பட்டுப் போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. கீழே ஊர் விளக்குகள் மினிக்கிக் கொண்டிருந்தன. ஊரின் ஒசைகளும், சந்தடிகளும் எட்டாத உயரத்தில் உட்கார்ந்திருந்தேன்.

பார்வதி: கதையை மேலே எழுதுவதற்கு முன்னால் உனக்கு ஒரு வார்த்தை. உன்னைப் பற்றித்தான் எழுதப் போகிறேன் என்பதை இதற்குள் நீ புரிந்து கொண்டிருப்பாய். ஆனால் யாருக்காகவோ, எதற்காகவோ, எதையோ, எழுதுகிறேன் என்று நினைத்து, நீ படிக்காமல் இருந்து விடக் கூடாது அல்லவா? உன்னையே நினைத்து, உன் பொருட்டு, உனக்கு மட்டுமே இதை எழுதுகிறேன். ஏக்கத்தை உண்டாக்கியவள் நீ. அன்பை அளித்து மறைந்தவள் நீ. உனக்குத்தானே சொல்ல வேண்டும். நீ எங்காவது இருக்கத்தான் இருப்பாய்! ஆளைக் கொள்ளை கொள்ளும் அந்த அழகும் உன்னோடு இருக்கத்தான் இருக்கும். இதை நீ படிக்காமலிருக்க மாட்டாய்! இவ்வாறெல்லாம் எனக்கு நானாகவே நம்பிக் கொண்டுதான் சிதறிப் போன ஆசையின் பின்னங்களை இப்படி எழுத்தில் வாரி இறைத்திருக்கிறேன்.

ஊர், சந்தடி நிறைந்திருந்தால் என்ன? மயான பூமி போல் அமைதியாக இருந்தாலென்ன? விளக்குகள் மினுமினுத்தால் என்ன? தனி இடத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக உட்கார்ந்து கொண்டிருப்பவனுக்கு இதனாலெல்லாம் ஆக வேண்டியதென்ன? ஆகப் போவதுதான் என்ன?

மூன்று தடவைகள் பரீட்சையில் தவறி விட்டு, மாதம் முப்பது ரூபாய்ச்சம்பளத்தில் ஒரு வேலை கூடக் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த சமயம் அது. அன்றாடங் காய்ச்சியான ஒரு ஏழைக் குடும்பத்து வாலிபனுக்கு இந்த வறண்ட நிலையை எவ்வளவு காலம் சகித்துக் கொண்டிருக்க முடியும்? வீட்டுக்கும் பாரமாக, தனக்கும் பாரமாக வாழ்வதை விடச் சாவது எவ்வளவோ மேல்.

அப்போது எனக்கு இருந்த மனநிலையில் அவநம்பிக்கையும், வறட்சியும், தற்கொலை நினைவுகளும், இடைவிடாமல் குமுறிக் கொண்டிருந்தன. எங்கும் புறக்கணிப்பு, எதிலும் தடை. வாழத் துடிக்கும் வயசில் வசதியற்ற நிலை, இப்படி இருந்தால் எந்த இளைஞனுக்குத்தான் தற்கொலை நினைவு தோன்றாது?

நான் பள்ளிக்கூடத்தில் படித்த புத்தகங்களையும், பேப்பர்களையும் பழைய சாமான்களையும் விலைக்குப் போட்டுச்சேர்த்து வைத்திருந்த பத்து ரூபாய் பணத்தை