பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



மனித உருவமும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டேன். சில விநாடிகள் என் கண்களையே என்னால் நம்ப முடியாமல் இருந்தது.

தான் விரும்பி செய்து கொள்ளுகிற ஒர் தவறான காரியத்தை, மற்றவர் செய்து கொள்ளக் கண்டால் மனித மனம் திடுக்கிடுகிறது. அது தழும்பேறிய இயற்கை.

குபீரென்று என் கையிலிருந்த சுருக்குக் கயிற்றைத் தூர எறிந்துவிட்டு, அந்த மரத்தை நோக்கி வேகமாக ஓடினேன்.

"யாரது? நில்லுங்கள்... நில்லுங்கள்... வேண்டாம்” என்று இரைந்து கத்திக் கொண்டே ஓடினேன்.

அந்த உருவத்தினிடமிருந்து பதில் வரவில்லை.

“பேயா? பிசாசா? அல்லது நம் கண்களை ஏமாற்றும் வெறும் பிரமையா?”

"யாரது? பதில் சொல்லுங்கள்!” என் தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு கத்தினேன்.

"நான்தான்.” மிரண்டு குழறுகிற தொனியில் ஒர் இனிய பெண் குரல் என் காதுகளில் ஒலித்தபோது, எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“நான்தான் என்றால் ... யார்?... இந்த மாதிரி அசட்டுத்தனம் செய்யலாமா? எல்லோரையுங் காத்து அருள் புரியும் முருகன் சன்னிதிக்குப் பின்புறமே இந்த அக்கிரமத்தைச் செய்யத் துணியலாமா?” என் குரலில் அதட்டும் தன்மை ஒலித்ததைக் கண்டு நானே வியந்து கொண்டேன். அந்தப் பெண்ணை அதட்டும் போது சற்றுமுன் அதே அக்கிரமத்தை அதே இடத்தில் நானும் செய்து கொள்ள இருந்தேனென்பதை மறந்துவிட்டேன்... அப்படி மறந்துவிடுவதுதானே மனித சுபாவம்!

"அதையேதான் நானும் திருப்பிக் கேட்கிறேன்! நீங்கள் யார்? ஏதோ என் வேதனை எனக்கு” குரல் இளங்குரலாகத்தான் ஒலித்தது.

"வேதனைகள் எல்லோருக்கும் எப்போதும் உண்டு அம்மா. உங்கள் குரல் இளங்குரலாகத் தென்படுகிறது. இந்த வயதில் இவ்வளவு விரக்தி கூடாது. உயிரைக் கொடுத்தவனுக்கு எப்போது அதைத் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். அவனை முந்திக் கொண்டு நாமாகவே அதை அவனிடம் ஒப்படைக்க முயல்வது சிருஷ்டியோடு எதிர் நீச்சுப் போடுவதாகும்...”

"ஐயா! நீங்கள் யாராயிருந்தாலும் சரி, உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். பேசாமல் போய்ச்சேருங்கள் எனக்குவேண்டாம்.இந்த வறட்டுவேதாந்தமெல்லாம்."

"அப்படிச் சொல்லாதீர்கள். வாருங்கள், கீழே போகலாம்.”

அந்தப் பெண் கீழே வரமுடியாதென்று சண்டித்தனம் செய்தாள். நயத்திலும் பயத்திலுமாக அவளை மிரட்டி அங்கிருந்து அவளைக் கீழே அழைத்துக் கொண்டு போனேன்.

என் இதயத்தில் அப்போது என்ன என்ன எண்ணங்கள் தோன்றின, தெரியுமா?