பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / உனக்கு மட்டும் ★ 83



“முருகா! நீ கண் கண்ட தெய்வம்! உயிர்களின் ரட்சகன். தற்கொலைக்காக உன் கோவிலை நாடி வந்தேன். நீ என்னைக் கொண்டு என்னையே காப்பாற்றி விட்டாய்! என்னை மட்டுமா, இன்னொரு பெண்ணையும் காப்பாற்றச் செய்துவிட்டாய்? பிழைப்பது, பிழைக்கச் செய்வது, வாழ்வது, வாழ்விப்பது! இதுதான் உன் அருள் போலும்.'

இருளில் படிகளின் பாதையாக இறங்குவது சாத்தியமில்லை.இருவரும் சிறுரோடு போலிருந்த யானைப் பாதை வழியே மலையிலிருந்து கீழே இறங்கினோம். அவள் முகத்தையோ, உருவத்தையோ, இருளில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அடிவாரத்துக்கு வந்து சேர்ந்ததும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்துக் கொண்டோம். நான் எதிர்பார்த்ததைவிட அதிகம் சிறுவயது அவளுக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருக்கும். பருவத்தின் அழகை எடுத்துக்காட்டும் வளர்ச்சி, வளர்ச்சியோடு இயைந்த வாளிப்பு. வஞ்சிக்கொடி துவண்டு நிற்பதுபோல் அந்த ஒற்றை நாடியான செளந்தரிய சரீரம் எனக்கு முன் தெரு விளக்கின் மங்கிய ஒளியில் துவண்டு நின்றது.

“உனக்கு எந்த ஊர்?”

சிறிதுநேரம் அவள் பதிலே பேசவில்லை. கால் பெருவிரலால் தரையைக் கீறிக் கொண்டு நின்றாள்.

"உன்னைத்தான் கேட்கிறேன். பேசமாட்டாயா?. உனக்கு எந்த ஊர்?”

“எனக்குத் தாராபுரம்.” இரண்டு நீளமான ரோஜாமொட்டுக்களைப் பூட்டி வைத்திருந்தாற்போன்ற அந்த அழகிய உதடுகள் மெல்லத் திறந்தன.

"உன் பெயர் என்னவோ?”

இப்படிக் கேட்டவுடன் தலைநிமிர்ந்து தீர்க்கமாக என்னை ஒரு பார்வை பார்த்தாள் அவள். பின்பு மெல்லிய குரலில் பதில் கூறினாள்; “என் பெயர் பார்வதி”

"தனியாகத்தான் பழனிக்குப் புறப்பட்டு வந்தாயா?”

“தற்கொலை செய்து கொள்ள வருகிறவர்கள் தனியாக வராமல் நாலைந்து பேரைத் துணைக்குக் கூட்டிக் கொண்டா வருவார்கள்?” வறண்ட -உணர்வற்ற சிரிப்பு ஒன்று அவளிடமிருந்து கிளம்பிற்று.

“அதற்குக் கேட்கவில்லை! இந்த வயதில் இப்படிப்பட்ட துணிச்சல் ஒரு பெண்ணுக்கு இருக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. அதனால்தான் கேட்டேன்!”

"அதே கேள்வியை நான் உங்களைத் திருப்பிக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்களோ? இந்த வயதில் இப்படித் துணிச்சல் ஒரு ஆணுக்கு.”

எனக்குப் பகீரென்றது.

“என்ன? நீ எதைச் சொல்லுகிறாய்?”