பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“எதையா? நீங்கள் அந்தப் பூவரச மரத்தடியில் என்ன செய்து கொண்டீர்கள் என்பது எனக்கும் தெரியும்!” குறும்புத்தனம் இழையோடும் அவள் வாயிதழ்களில் சிரிப்பொலி எழுந்தது.

முதல் தடவையாக அந்தப் பெண்ணுக்கு முன்னால் நான் தலைகுனிந்தேன். என் துணிவு அடிப்பட்டுச் செத்த பாம்பு மாதிரி சுருண்டு விழுந்துவிட்டது.

“சரி! இனிமேலும் இந்த நள்ளிரவில் இப்படி மலையடிவாரத்தில தனி வழியில் நீயும் நானும் நின்று கொண்டிருப்பது பொருத்தமில்லை. ஜனங்களோ, ரோந்து போலீஸ்காரர்களோ இந்த நிலையில் உன்னையும் என்னையும் பார்த்தால் தப்புக் கணக்குப் போட்டு விடுவார்கள் வா...போகலாம்...”

“எங்கே போவது?.”

“நீ எங்கேயாவது தங்கியிருக்கிறாயா?”

“தங்கவாவது ஒன்றாவது? தாராபுரத்திலிருந்து இரவு எட்டரை மணிக்கு மேல்தானே வந்தேன்? பாழும் உயிர் இதற்குள் போயிருக்க வேண்டியது! நீங்கள் போட்டித் தற்கொலைக்கு வந்து எல்லாம் குட்டிச் சுவராய் அடித்து விட்டீர்கள்!”

"உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய். அப்படித்தானே?”

அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள். மனத்தைக் கவரும் அந்தக் கன்னிச் சிரிப்பில் என் உணர்வுகள் கிறங்கின.

“நான் ஒரு சத்திரத்தில் அறை எடுத்திருந்தேன். இன்னும் சாவி என்னிடம்தான் இருக்கிறது.நீ கதவை உட்புறம் தாழிட்டு அறைக்குள்படுத்துக்கொள். நான் சத்திரத்து வெளி வராந்தாவில் படுத்துக் கொள்கிறேன்.”

“நாளை பொழுது விடிந்தால் உங்களையும் என்னையும் சேர்த்துப் பார்க்கிற உலகம் என்ன எண்ணும்?”

“உலகம் ஆயிரம் எண்ணும் உனக்கு உன் மேலும் என் மேலும் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? உன்னால் முடியுமானால் வரலாம். முடியாவிட்டால் அப்புறம் நான் வற்புறுத்தத் தயாராயில்லை”

“உங்களை நான் எப்படி நம்புவது? என்னை உள்ளே படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத் திரும்பவும் ஒசைப்படாமல் மலைக்குப் போய் அந்தப் பூவரசமரத்தில் தொங்கிவிட்டால்” அவள் என்னை மறுபடியும் கேலி செய்தாள்.

"உன்னை மட்டும் நான் எப்படி நம்புவது?வெளிவராந்தாவில் நான்துங்கிய பிறகு ஒசைப்படாமல் கதவைத் திறந்து கொண்டுபோய் உயிரை மாய்த்துக் கொண்டால்...?”

இந்தப் பரஸ்பர விவாதத்தால் இருவருமே சிரித்துவிட்டோம்.

"சரி, நான் வருகிறேன். வாருங்கள். உங்கள் சத்திரத்துக்குப் போகலாம்." கடைசியாக அவள் என்னோடு வர இணங்கினாள்.