பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏதோ ஒன்றைக் குறைவது தெரியாமல் நான் எடுத்து என் மனத்தில் சேர்த்துக் கொண்டு வருகிறேன்.

சந்தர்ப்பங்கள் நேரும்போது அப்படி மனத்தில் சேர்த்துக் கொண்டு வருகிற இலக்கிய முதலில் இருந்து வேண்டியதை எடுத்துக் கதைகளை எழுதுகிறேன். இந்தத் தொகுதியிலுள்ள கதைகளையும் அவ்வப்போது சேர்த்த இலக்கிய முதலிலிருந்து உருவாக்கித் தந்திருக்கிறேன். இவற்றில் நயமும், நளினமும் நயமின்மையும், நளினமின்மையும், கருத்தும், கற்பனையும், கருத்தின்மையும், கற்பனையின்மையும் எல்லாம் இருக்கலாம். எப்படியிருந்தாலும் இவற்றைப் படைத்து இவற்றுக்குத் தாய்மையும், தந்தைமையும் பூண்ட சொந்தக்காரன் நான்தான். இந்தக் கதைகளை இப்போது காண்கிற சமயத்தில் என்னையே பல்வித நிலைகளில் காண்பதுபோல் எனக்கு ஒரு பிரமை உண்டாகிறது. அப்படி உண்டாவது இயல்பே!

என் மனத்தில் சேர்த்து வைத்திருக்கும் இலக்கிய முதலீட்டிருந்து உருவாக்கிய இந்தச் சிறுகதைகளைத் தமிழ் வாசகர்களுக்கு முன் வைக்கிறேன்.

விருந்தோம்பல் தமிழர்களுக்கு மிகவும் நல்லதொரு பண்பு. இலக்கியப் படைப்பாளியும் விருந்து பேணத் தகுந்தவனே. ஆனால் அவன் அளிக்கிற விருந்தும் இலக்கிய விருந்தாகத்தான் இருக்க முடியும்.

இலக்கிய ஆசிரியனுக்குப் பெருமை ஒரு கற்பு. அதை விட்டுவிடாமல் போற்றிக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.இலக்கியப் பணிபுரிகிறவனுக்கு நேர்மையும், பெருமை பேணிக் கொள்ளுதலும் ஒழுக்கங்கள்; கற்பை ஒத்த சிறந்த ஒழுக்கங்கள்.இன்றுவரை இந்த ஒழுக்கங்களைக் காப்பாற்றிக் கொண்டும், இனி என்றும் காப்பாற்றிவிட வேண்டுமென்ற ஆசை கொண்டும் ஏதோ தமிழில் எழுதி வருகிறேன். எழுத்து ஒரு தொழிலாக என்றும் என் மனத்தில் பட்டதில்லை. நான் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை அதை ஒரு தூய புனிதமான வேள்வியாகவே எண்ணிக் கொண்டு வருகிறேன்.

என் கதைகளைப் படிப்பதற்கு முன்னால் என்னைப் படித்துக் கொள்ள வாசகர்களுக்கு இந்தச் சில வார்த்தைகளை எழுதினேன்.

நாவலுக்கும், சிறுகதைக்கும், குறுநாவலுக்கும் எல்லை, உத்தி, அமைப்பு எல்லாம் வேறுபடலாம். ஆனால் படைப்பதனால் ஏற்படும் இன்பமும் செருக்கும், இரசிப்பதனால் ஏற்படும் சுவையும் எல்லா இலக்கிய வகையினாலும் தருவோர் - பெறுவோர் இரு தரப்பிலும் நிச்சயமாகவும் நிரந்தரமாகவும் உண்டு.

கவிகளின் இதயதாபங்களையும், சொற்களுக்காகச் சமயா சமயங்களில் அவர்கள் தவமிருக்கும் நிலைகளையும் பல சந்தர்ப்பங்களில் அநுபவித்து உணர்ந்திருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் அந்த அனுபவம் ஒருசிறுகதையாகக் கிடைத்திருக்கிறது. சண்பகப்பூவும் லண்டன் ஸ்கூலும், வேனில் மலர்கள்