பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / காலத்துக்கு வணக்கம் ★ 93



அவளுக்கு அழுகை வந்துவிட்டது. விசித்துக்கொண்டே விக்கி விக்கி அழத்தொடங்கிவிட்டாள். என் கோபம் மாறியது.

"சே! இதென்ன? அசடு மாதிரி இப்படியா அழுவது? என்ன செய்யலாம்? நமக்கு வாய்த்த உத்தியோகம் அப்படி இருக்கிறதே!” என்று கூறி அவளைச் சமாதானப்படுத்தினேன்.

“இந்தத் தடவையாவது நான் முழுசா உயிரோடு பெத்துப் பிழைக்கனுமே என்று உங்களுக்கு அக்கறை இருந்தால்தானே? அசம்பாவிதமாக ஏதாவது நடந்தால் அப்புறம் நான் பிழைச்சு எழுந்திருப்பேன் என்று கனவிலேகூட நினைக்காதீங்கோ!” - அவள் குரலில் ஒரு அழுத்தம் ஒலித்தது. மேலே வளர்த்தாமல் நான் பேச்சை நிறுத்தினேன்.

அன்று மலைமேல் போய் வருவதற்குத் திட்டமிட்டிருந்தோம். இரண்டு நாட்களாகப் பாபநாசத்தில் முகாம் போட்டிருந்தேன். அக்காலத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் அவுட் ஸ்டேஷனும், அதில் ஒரு ஏட்டும் சில கான்ஸ்டபிள்களுமே உண்டு. அவர்களும் எனக்கு ஒத்தாசையாகப் பாபநாசத்துக்கு வந்திருந்தார்கள். அன்று காலை எல்லோரும் பதினோரு மணி சுமாருக்குக் கலியாண தீர்த்தத்தின் ஒரமாகவே சென்று பாண தீர்த்தத்தை அடைவதென்று தீர்மானம் செய்திருந்தோம்.

பாபநாசத்தில் நாங்கள் தங்கியிருந்த இடம் லோக்கல் பண்டு ஆஸ்பத்திரிக்கு எதிர்த்தாற் போலிருந்தது. பழைய காலத்துப் பாணியில் கட்டப்பட்ட முசாபரி பங்களா அது. பத்தேகால் மணி சுமாருக்கு முசாபரி பங்களாவின் வாசலுக்கு வந்து வெளியே சென்றிருந்த கான்ஸ்டபிள்கள் வருகிறார்களா என்று எட்டிப் பார்த்தேன். அப்போது ஒரு ஆள்மீது என் பார்வை நிலைத்தது. உற்றுப் பார்த்தேன். அவனும் என்னைப் பார்த்தான். நான் போலீஸ் உடையிலிருந்தேன்.

அக்டோபர்-நவம்பர்

போலி மீசை ஆளை மாற்றிக் காட்டினாலும் அவன் ரங்கநாதன் தான் என்பதை நான் உடனே தெரிந்து கொண்டு விட்டேன். அவன் கையில் ஏதோ ஒரு மருந்துப்புட்டி வேறு இருந்தது.

உடனே உள்ளே சென்று சாதாரண உடையிலிருந்த இரண்டு கான்ஸ்டபிள்களை அனுப்பினேன். ஐந்தே நிமிஷங்களில் கான்ஸ்டபிள்கள் அவனை உள்ளே இழுத்துக்கொண்டு வந்துவிட்டனர். ஏறக்குறைய இரண்டரை வருஷங்களாக அகப்படாத ஆள் அகப்பட்டுவிட்டான்.

“என்னப்பா ரங்கநாதா! உன்னைத் தேடிப் பாணதீர்த்தத்துக்குப் புறப்படஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். நீ என்னடா என்றால் எங்களுக்குக் கொஞ்சம்கூடச் சிரமம் வைக்காமல் இங்கேயே வந்துவிட்டாய்!” என்று நான் எகத்தாளமாகக் கேட்டேன்.