பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



அழுதான். அந்த அழுகை என் இதயத்தைக் கலக்கியது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு உண்மையை மறைத்துக் கொள்வது எவ்வளவு கஷ்டமான காரியம்!

டிசம்பர்

என் மனைவி உடம்பு தேறி எழுந்துவிட்டாள். தன்னுடைய, அழகான ஆண் குழந்தையைக் கொஞ்சுவதற்கு நேரம் போதவில்லை அவளுக்கு.

“இந்தாங்கோ இதென்ன வேடிக்கை? நீங்கள் அட்டை கரி நிறம், நான் மா நிறம், நமக்கு எப்படி இவ்வளவு சிவப்பாகக் குழந்தை பிறந்தது?" என்று வேடிக்கையாகக் கேட்டாள் ஒரு நாள். என் உடல் அப்போது கிடுகிடுவென நடுங்கியது.

டிசம்பர் கடைசியில் ஒரு நாள் என்னைத் திருச்சிராப்பள்ளிக்குச் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகப் பிரமோஷனோடு மாற்றியிருப்பதற்காக என் சம்மத்தைக் கோரி மேலதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது.

அந்த உத்தரவு வந்த அதே சமயத்தில் வேறோர் கடிதத்தை உறைக்குள் இட்டு மேலதிகாரிக்கு அனுப்புவதற்கு விலாசம் எழுதிக் கொண்டிருந்தேன் நான்.

அது என் ராஜினாமாக் கடிதம்! முதலில் மேலதிகாரி என் ராஜினாமாவை ஒப்புக் கொள்ள மறுத்தார். பின் நான் வற்புறுத்தி ஒப்புக் கொள்ளச் செய்தேன். என் மனம் நிம்மதி அடைவதற்காக வேலையை உதறித்தள்ளினேன். ஆனால் அதன் பின்பும் நிம்மதி கிடைக்கவில்லை. சத்தியத்தை மறைத்து அசத்தியத்தை இரகசியமாக வைத்துக் கொண்டிருப்பவனுக்கு நிம்மதி ஏது?

டைரியைப் படித்து முடித்தாயிற்று. எத்தனையோ வருஷங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் மூழ்கி எழுந்து கரையேறிவிட்டேன். அதோ அவள் ஐம்பத்தாறு வயதுக் கிழவி. நான் எழுபது வயசுக் கிழவன். வீரராகவனுக்கு இருபத்தொன்பது வயது! மனைவி குழந்தையோடு விக்கிரமசிங்கபுரத்தில் வேலை பார்க்கிறான். அம்மாவையும் அப்பாவையும் பாணதீர்த்தம் பார்க்க வரச்சொல்லி கடிதம் எழுதியிருக்கிறான். ‘யார் அம்மா? யார் அப்பா? அதோ ரேழி வாயில்படியில் தலைவைத்து உறங்குபவள் அவன் தாயாரா? நான் அவன் தகப்பனா? எது உண்மை?’

உலகம் அப்படிச் சொல்லி உறவு உண்டாக்க வைத்தவன் நான்தானே? நான் சாகிறவரை அந்த ரகசியமும் சாகாது. பாணதீர்த்தம் பார்க்க வேண்டுமாம், பாணதீர்த்தம். அந்த இடத்து மண்ணை இன்னொரு முறை இந்த ஜன்மத்தில் மிதிக்கமாட்டேன்! நல்ல வேளை காலம் மட்டும் இப்படி மறதியை உண்டாக்காவிட்டால் என் மனமே என்னைக் கொன்றிருக்கும் மறந்து கொண்டே வாழ்கிறேன்.

"காலமே! ஓயாத சக்கரமே! எனக்கு இன்னும் நிறைந்த ஞாபகமறதியைக் கொடுத்தருள். நினைவே வேண்டாம் உனக்கும் உன் சக்திக்கும் ஒரு வணக்கம்”

(கல்கி, 28.4.1957)