பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. மெய்

நீதிமன்றத்திலிருந்து திரும்பி வந்து அரை மணிநேரம் ஆயிற்று. ஒரே அலுப்பாக இருந்தது. உடை மாற்றிக் கொண்டு சிற்றுண்டி காப்பி அருந்தினேன். மனத்தில் துளி நிம்மதி இல்லை. ஏதோ படுபாதாளத்தில் விழுந்து விட்டது போல ஒரு தாழ்மை மனப்பிராந்தி பிடித்து ஆட்டியது. பெருமையும், பேரும், புகழும் அன்றைய தினம் ஏற்பட்ட ஒரே ஒரு தோல்வியில் முழுகிப் போயின.

ஆம், மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டு அன்று வாதாடிய வழக்கிலே என் கட்சி தோற்று விட்டது. என் கட்சி மட்டுமா? நியாயமே தோற்று விட்டது. இப்போது நினைத்தாலும் நெஞ்சு குலுங்குகிறது. கொலை செய்யாத அப்பாவி மனிதனான என் கட்சிக்காரன் நீதியின் தீர்ப்பைக் கேட்டுக் குமுறிக் குமுறி அழுது கொண்டே சிறைக்குப் போனான். உண்மையில் அந்தக் கொலையைச் செய்தவனான எதிர்க்கட்சிக்காரன் சந்தர்ப்ப சாட்சியங்களின் உதவியால் நிரபராதி என்று கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டான்.

“ஐயோ சாமீ! தர்மம் நியாயம் எல்லாத்துக்குமே கண் அவிஞ்சு போச்சுங்களா?” என்று குற்றவாளியாக்கப்பட்டவன் கதறிய போது என் நெஞ்சை யாரோ இறுக்கி அமுக்குவது போல இருந்தது.

யார் என்ன செய்யலாம்? இந்தக் காலத்தில் சத்தியத்தின் தலைவிதி, சாட்சி சொல்பவர்களின் யோக்கியதையைப் பொறுத்தல்லவா இருக்கிறது!

மனம் மேலும் மேலும் குழம்பியது. நான் படம் பார்க்கப் புறப்பட்டேன். பெயரைப் பார்த்ததும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“அரிச்சந்திரன்” - முதலிலேயே தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன். எந்த மனக்குழப்பதைப் போக்கிக் கொள்ளலாம் என்றெண்ணி வந்தேனோ, அதே குழப்பத்தைச் சித்திரிக்கும் கதை.

பொறியிலிருந்து தப்புவதாக எண்ணிக் கொண்டு பொறிக்குள்ளேயே மாட்டிக் கொண்ட எலியின் நிலையை அடைந்தேன். ‘என் கதை?’ - மெய்க்கும் பொய்க்கும் ஏற்பட்ட போராட்டத்தில் பொய் வென்ற கதை அரிச்சந்திரன் கதை - அது பொய்க்கும் மெய்க்கும் ஏற்பட்ட போராட்டத்தில் பொய் தோற்ற கதை.

இந்த இரண்டு கதைகளுக்கும் இடையே காலம் என்ற கொத்தன் புகழ் என்ற பெரிய மதிலை எழுப்பியிருந்தான்.

அன்று கோர்ட்டில் நடந்த வழக்கில் நிரபராதியைக் காப்பாற்ற முயன்றவன் நான். என் கட்சி மெய்யின் கட்சி. ஆனால் அது தோற்று விட்டது. பிரதிவாதிக்காக வாதாடிய

நா.பா. 1 - 7