பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

724

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

இப்போது தன்னுடைய கடந்த காலத்தின் சாதனைகளையெல்லாம் நினைவு கூர்ந்து விட்டு, மறுபடியும் எண்ணிய போது ஜெயமாலாவைப் போல் ஒரு கத்துக் குட்டியை நினைத்துத் தன்னைப்போல் ஒருத்தி பொறாமைப்பட்டதே தவறென்று தோன்றியது அவளுக்கு.

சிங்கம் கொசுவை நினைத்துப் பொறாமைப்படுவதாவது?

டெலிபோன் மணி அடித்தது. வேலைக்காரி இருந்தால் போனை முதலில் அவள்தான் எடுத்து யார் என்று கேட்க வேண்டும். அவள் இல்லாததால் மேனகாதேவியே போனை எடுத்தாள்.

எதிர்ப்பக்கம் ஓர் இனிய குரல் ஒலித்தது.

“வணக்கங்க. நான்தான் ஜெயமாலா பேசறேன்.”

“உம்ம். வணக்கம் என்ன விஷயம்…?”

“ஒண்ணுமில்லேங்க. அதான் அந்தத் தாழம்பூ வார இதழ் பேட்டி விஷயமா உங்க வீட்டுக்கு வரணுமே…?”

“எப்படி வரப் போறீங்க? நான் வண்டி அனுப்பட்டுமா? டாக்ஸின்னா கிடைக்கிறது கஷ்டம். செலவும் ரொம்ப ஆகும்.”

“அதொண்ணும் சிரமமில்லிங்க. எங்கிட்ட ஒரு சின்ன வண்டி இருக்கு. டிரைவர் இன்னிக்கு வரலே. அவன் வரலேன்னா எப்பவாவது நானும் ஓட்டறதுண்டு; இன்னிக்கு உங்க வீட்டுக்கு நானே ஒட்டிக்கிட்டு வரலாம்னு இருக்கேன்.”

“நாலு படத்திலே நடிக்கிற பொண்ணு நீயே காரை ஒட்டிக் கிட்டு வந்தால் தெருவிலே வேடிக்கை பார்ப்பாங்களே..?” முதலில் கொடுத்த ‘நீங்க’ மரியாதையை மாற்றி மேனகாவே ‘நீ’ போட்டாள்.

“அதெல்லாம் பழைய காலம். இப்பல்லாம் அப்படி யாரும் பார்க்க மாட்டாங்க.”

“சரி உன் இஷ்டப்படி நீயே ஓட்டிக்கிட்டுத்தான் வாயேன்.”

போனை வைக்கும்போது எரிச்சலோடு வைத்தாள் மேனகாதேவி,

'நடிக்க ஆரம்பிச்சுப் பத்து வருஷங்களுக்கு அப்புறம்தான் அந்த நாளிலே நான் ஒரு காரைப் பற்றியே யோசிக்க முடிஞ்சுது. இப்ப என்னடான்னாப் போன வருஷம்தான் நடிக்கத் தொடங்கின இந்தக் கத்துக்குட்டி, இப்பவே தங்கிட்டக் கார் இருக்குங்கிறா. ஏதோ இவதான் நவீன நாகரிகத்தின் பிரதிநிதி போல, ‘அதெல்லாம் பழைய காலம்’னு என்னைக் குத்திக் காட்டிப் பேசறா, ஓட்டத் தெரியாம ஓட்டி எங்கேயாவது கையைக் காலை, ஒடிச்சுக்கப் போறா’, என்று மேனகாதேவி நினைத்தாலும், அவளுடைய உள்மனம் வேறு எதை எதையோ எண்ணிப் புகைந்தது.

‘நான் பார்க்காத காரா? பெட்ரோல் விலை ஏறினதாலே சின்ன வண்டியை வைச்சிக்கிட்டுப் போன வருஷம்தான் கப்பல் போன்ற காடிலாக்கை விற்றேன். ஒரு