பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பிரதிபிம்பம்

725

மரியாதைக்கு நான் இங்கேயிருந்து வண்டி அனுப்பட்டுமான்னு கேட்டால் உடனே தங்கிட்டவும் வண்டி இருக்குன்னு சொல்லிக் காமிக்கிறா. சரியான திமிர்ப் பிடித்தவளா இருக்கிறாளே.”

மணி ஆறரைக்குத் தாழம்பூ ஆசிரியர் போன் செய்து தங்கள் அலுவலக உதவி ஆசிரியர் புறப்பட்டு விட்டதாகவும், ஜெயமாலா அவளுடைய வண்டியிலேயே வந்து விடுவாள் என்பதாகவும் தெரிவித்தார்.

‘ஜெயமாலா வருகிறாள்’ என்று கட்டியம் கூறுவது போல், அவளும் மற்றவர்களும் சொன்னது மேனகாதேவிக்கு எரிச்சலூட்டியது.

‘வந்தால் வரட்டுமே! இதற்கு ஏன் இத்தனை ‘பராக் பராக்’ போடுகிறார்கள்? நான் என்ன வாசலில் போய் ஆரத்தி எடுக்க வேண்டுமோ?’ என்று தனக்குத்தானே முணுமுணுத்தாள் அவள். அந்த ஆத்திரத்தில் வேலைக்காரி முத்தம்மாவைக் கூப்பிட்டு, “இந்தா முத்தம்மா! யாரோ வெட்டிப் பசங்க பார்க்க வராங்க. காப்பி, டிபன், எதுவும் வேணாம். கேட்டால் மட்டும் குடிக்கத் தண்ணி குடு, போதும்!” என்று கடுமையாக உத்தரவு பிறப்பித்தாள். பின்பு தன்னை அலங்கரித்துக் கொண்டு தயாராக முன் ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.

முதலில் பத்திரிகை உதவி ஆசிரியரும், சுருக்கெழுத்தரும் ஒரு ஸ்கூட்டரில் வந்தார்கள். அப்புறம் கால் மணி நேரம் கழித்து, பியட்கார் மெல்ல வந்து நின்றது. அதிலிருந்து குமாரி ஜெயமாலா இறங்கி வந்தாள்.

படத்தில் தெரிந்ததை விட நேரில் அவள் மேலும் அதிக அழகோடு இருப்பதாக மேனகாதேவி உணர்ந்தாள்.

என்றாலும் கொஞ்சம் அமுத்தலாகவே அவளை வரவேற்றாளே ஒழிய, உற்சாகம் காட்டவில்லை. மலர்ச்சியாகவும் இல்லை.

“நீங்கள் எனக்கு அம்மா மாதிரி. என்னை ஆசீர்வாதம் பண்ணனும்” என்று வணங்கி விட்டு ஜெயமாலா கூறிய போது கூட அவள் தன் வயதைச் சுட்டிக் காட்டிக் கிண்டல் செய்யவே ‘அம்மா’ மாதிரி என்று சொல்வதாக மேனகாவுக்குக் கோபம் வந்தது.

பேட்டி தொடங்கியதுமே, அந்தக் கோபத்தைத் தன் பதிலில் காட்டினாள் மேனகாதேவி.

“எங்க நாளிலே எல்லாம். இந்தக் காலத்தைப் போல யாராவது ரெண்டு புரொட்டியூஸருக்கு முன்னாலே பல்லிளிச்சுக் காட்டி மறு நாளே ஹீரோயினா ஆயிட முடியாது. எவ்வளவோ உழைச்சு நடிச்சாத்தான் படிப்படியா முன்னுக்கு வர முடியும்; இன்னிசை மன்னர் எல்லப்ப பாகவதர் பதினைஞ்சு வருஷங்கள் முடிசூடா மன்னராக இருந்தார். அப்ப இந்த ஃபீல்டிலே அவருக்கு ஈடு கொடுத்து நடிக்கவும், பாடவும் முடிந்த கதாநாயகி நான் ஒருத்திதான். இப்ப மாதிரி வாயசைச்சு யாரோ பின்னாலே இருந்து பாடற காலமில்லே அது.”