பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

726

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

இதைக் கேட்டு ஜெயமாலா மிகவும் கடுமையாகப் பதில் சொல்லக் கூடும் என்று மேனகாதேவி நினைத்தாள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்குப் பின்பும் ஜெயமாலா மிகவும் வினயமாகவும், அடக்கமாகவுமே பதில் சொன்னாள்.

“இவங்க சொல்றது உண்மை. அந்த நாளிலே இவங்க உழைச்ச அவ்வளவு உழைப்பு இன்னிக்கு நடிக்கிற எங்க கிட்டே இல்லே. ஆனா அந்த நாளிலே இவங்களுக்குக் கிடைக்காத பல வசதிகளெல்லாம் எங்களுக்கு இப்பக் கிடைக்குது. அதிகத் தியேட்டர்கள் பெருகித் தொழில் வளர்ந்ததுதான் காரணமே ஒழிய, எங்கள் உழைப்பு, வளர்ந்தது என்று கூற முடியாது. இந்த வகையிலே மேனகா அக்கா மாதிரி இருக்கிறவங்கதான் எங்க குரு மாதிரி இருந்து வழி காட்டணும்.”

அவள் தனக்கு அக்கா பட்டம் போட்டது கூடத் தன் முதுமையைத் தனக்கு ஞாபகப்படுத்துவதற்குத்தானோ என்று தோன்றியது மேனகாவுக்கு.

மேலும் முக்கால் மணி நேரம் அவர்கள் உரையாடல் நீடித்தது. முதலிலிருந்து ஜெயமாலாவையும், அந்தப் பத்திரிகைக்காரர்களையும் தன் எதிரிகளாகப் பாவித்துக் கொண்டதால் மேனகாதேவியின் பதில்களெல்லாம் காரமாகவும், இளம் நடிகைகளையும் புதுக் கதாநாயகிகளையும் குத்திக் காட்டுவதாகவுமே இருந்தது. ஆனால் ஜெயமாலாவின் பதில்கள் எல்லாம் நிதானமாகவே இருந்தன. இறுதியாக, “சென்ற தலைமுறையின் சிறந்த நடிகை என்ற முறையில் நீங்கள் கலைத்துறையில் விரும்புவது என்ன?” என்ற கேள்வியை மேனகாவிடம் கேட்ட போது, அவள் காட்டமாக, “புதிய தலைமுறைக் கத்துக்குட்டி நடிகைகளுக்குப் பாடம் புகட்டுவதற்காகவாவது ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துக் காட்ட விரும்புகிறேன்” என்று பதில் சொன்னாள். ஆனால் அதே கேள்வியை, “புதிய தலைமுறையின் இளம் நடிகை என்ற முறையில் நீங்கள் விரும்புவது என்ன?” என்று குமாரி ஜெயமாலாவிடம் கேட்டபோது,

“நான் தாயில்லாப் பெண்ணாக வளர்ந்தவள்.மேனகாதேவியைப் பார்க்கும் போது என் அன்னையிடம் எழும் மரியாதை எனக்கு எழுகிறது.வாழ்வில் இல்லா விட்டாலும் ஒரு படத்திலாவது அவர்கள் என் அன்னையாக வர நான் மகளாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று பவ்யமாகப் பதில் கூறினாள்.

இந்தப் பதில் மூலம் கூட மேனகாவின் கோபம் தணியவில்லை. ‘நீ அம்மாவாக நடிக்கத்தான் லாயக்கு’ என்று தன்னை அவள் நாகுக்காகக் கேலி செய்கிறாளோ என்று சந்தேகமாக இருந்தது மேனகாவுக்கு.

“என்ன காரணமோ தெரியவில்லை.இந்தச் சந்திப்பு:பேச்சுஎல்லாமே மேனகாவும், ஜெயமாலாவும் ஒருவர் மீது ஒருவர் நடத்திய பட்டி மண்டபம் போல் அமைந்து விட்டது.ஜெயமாலா பக்கம்தான் நிதானம் தெரிகிறது.

“மேனகாதேவி பக்கத்திலிருந்து ஒரே தாக்குதல் மயம்தான்” என்று பத்திரிகையிலிருந்து வந்திருந்த இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். பேட்டி அவர்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை.