பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பிரதிபிம்பம்

727

ஜெயமாலாவுக்கோ தான் இவ்வளவு விட்டுக் கொடுத்து வினயமாயிருந்தும், மேனகாதேவி தன் மேல் ஏன் அவ்வளவு விரோத பாவம் கொண்டாடுகிறார் என்பது புரியவில்லை. அவள் மனம் உள்ளூறப் புண்பட்டது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சமாளித்தாள் அவள். மேனகாதேவியைப்போல் முதிர்ந்த நடிகை இவ்வளவு தூரம் தொழிற் பொறாமை உள்ளவளாக இருக்க முடியும் என்று ஜெயமாலா எதிர்பார்க்கவேயில்லை. தன்னைப் போல் படித்துப் பட்டம் பெற்று, ஓர் ஆவலோடு கலைத்துறையில் பிரவேசித்திருக்கும் இளம் நடிகையிடம் மேனகாதேவிக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்று புரியாமல், அதை எல்லார் முன்னிலையிலும் வெளிக் காட்டிக் கொள்ளவும் முடியாமல் பதறினாள் ஜெயமாலா.

பேட்டி முடிந்ததும் அதைப் பற்றித் திருப்தி இல்லாத நிலையில் அரைகுறை மனத்தோடு முதலில் பத்திரிகையாளர்கள் விடைபெற்றுக் கொண்டு வெளியே புறப்பட்டார்கள். அவர்கள் புறப்பட்டதும் மேனகாதேவி தன்னிடம் ஏதாவது பேசுவாள் - அப்படிப் பேசினால், அவளுடைய தேவையில்லாத கடுமையையும், வெறுப்பையும் விரோத பாவத்தையும் மாற்ற முயற்சிக்கலாம் என்று எண்ணிச் சிறிது நேரம் அங்கேயே தாமதித்தாள் ஜெயமாலா,

ஆனால் அந்தத் தாமத்துக்கு ஒரு பயனும் விளையவில்லை.

“அப்போ..எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு...” என்று வெட்டி விட்டாற் போலக் கூறி விட்டு மேனகாதேவி எழுந்து விடவே, ஜெயமாலாவும் புறப்பட வேண்டியதாயிற்று.

“நான் வரேன் அக்கா!” என்று வணங்கி விட்டுப் புறப்பட்ட ஜெயமாலாவுக்குக் கையும் காலும் பதறியது. மேனகாதேவி முகத்தை முறித்தாற் போல் தன்னை அனுப்புவதாகப் பட்டது அவளுக்கு. ‘இவ்வளவு பாசத்தோடும் மரியாதையோடும் பழகிய தன்னிடம் மேனகாதேவி ஏன் அவ்வளவு கடுமையாக இருக்கிறாள்?’ என்றெண்ணிக் குழம்பிய மனத்தோடு காரை ஸ்டார்ட் செய்த ஜெயமாலா பதற்றத்திலும், மனக்குழப்பத்திலும் கியரை நியூட்ரல் செய்யாமல் கிளப்பவே மின்வெட்டும் வேகத்தில் காரியம் கைமீறி விட்டது. கார் சீறிப் பாய்ந்து போர்டிகோ சுவரில் மோதி ஸ்டியரிங்கில் ஜெயமாலாவின் முகம் இடித்து மூக்கிலும் நெற்றிப் பொட்டிலும் இரத்தம் கசியத் தொடங்கியது. கார் மோதிய சத்தம் கேட்டு மேனகாதேவியும், வேலைக்காரி முத்தம்மாவும் வெளியே ஓடி வந்து பார்த்தார்கள்.

மோதிய சுவர் சரிந்து வண்டி நின்று போய் என்ஜின் ஆஃப் ஆகி விட்டது. ஜெயமாலா டிரைவர் ஸீட்டிலேயே நினைவு தப்பி மூர்ச்சை ஆகியிருந்தாள்.

“அடி பாவி! என்ன காரியம் பண்ணினே? பார்த்து ஓட்டப்படாதா?’ என்று பதறிக் கூவியபடியே ஓடிவந்த மேனகாதேவி, வேலைக்காரியின் உதவியோடு முன் ஸீட்டின் கதவைத் திறந்து ஜெயமாலாவைத் தூக்கிக் கொண்டு போய், வீட்டுக்குள் படுக்கையில் கிடத்தினாள். முதலுதவிகளைச் செய்து விட்டு முகத்தில் தண்ணீர் தெளித்து மூர்ச்சையிலிருந்து பிரக்ஞை வந்ததும், டாக்டருக்கு போன் பண்ணினாள்.