பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

728

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“என்ன? ஏன் இப்படி ஆச்சு? பார்த்து ஓட்ட வேண்டாமா?” என்று மேனகா கேட்ட போது, “ஏதோ மனக்குழப்பதிலே ஓட்டினேன், இப்படி ஆயிடுச்சு. என்னாலே வீணா உங்களுக்குச் சிரமம்?” என்று ஜெயமாலா பயந்தபடியே சொன்னாள். நல்லவேளை சிராய்ப்பைத் தவிர பெரிய காயம் எதுவுமில்லை.

“அசடு மாதிரிப் பேசாதே! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னுநான் தெய்வத்தைப் பிரார்த்திச்சேன். எனக்கென்ன சிரமம்? சுவர் போனால் கட்டிக்கலாம். உயிர் போனா வருமாம்மா? நீ இனிமே கார் ஓட்டப்படாது” என்று சொல்லிக் கொண்டே படுக்கையில் அருகே அமர்ந்து அவள் தலையை ஆதரவாகக் கோதி விட்டாள் மேனகா,

ஜெயமாலாவால் இந்தப் பரிவை நம்பவே முடியவில்லை. சற்று முன் அவ்வளவு கடுமையாக இருந்த மேனகாவா, இப்படி மாறினாள் என்று வியப்போடு அவளை ஏறிட்டுப் பார்த்தாள் ஜெயமாலா.

“யார் கண்ணோ பட்டிருக்குதம்மா! திருஷ்டி கழிக்கணும்.” என்றாள் அருகே நின்ற வேலைக்காரி முத்தம்மா.

“பாவி! என் கண்ணேகூடப் பட்டிருக்கும்டீ,..!” என்று மேனகாவே வாய் திறந்து கூறிய போது,

“அப்படிச் சொல்லாதீங்க அக்கா! என் ஆசை இப்ப நிறைவேறிடிச்சு. ஒரு படத்திலேயாவது நீங்க என் அம்மாவா நடிக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். இப்ப நிஜமாவே நீங்க என் அம்மா மாதிரி ஆயிட்டீங்க!” .

“என் செல்லக்கிளியே! நீ கொள்ளை அழகும்மா. ஆண்டவன் புண்ணியத்திலே உன் முகத்துக்கு ஒரு குறையும் வராமத் தப்பினியே! எனக்கு அது போதும்!”

“நீங்க இப்படிப் பேசணும்னு தவிச்சுத்தான் நான் மனம் பதறினேன் அக்கா.”

“என்னவோ என் புத்தியைச் செருப்பாலே அடிக்கணும். பொறாமை என் கண்ணை அவிச்சுது. என்னென்னமோ பேசினேன். பாவி என் கண்ணேறு பட்டே இப்படி ஆகியிருக்கும்” என்று சொல்லிக் கொண்டே அந்தப் பத்திரிகை ஆசிரியர் வீட்டுக்குப் போன் பண்ணி,”இன்னிக்கு எடுத்த பேட்டியைப் போடவேண்டாம் ஸார், அதிலே எங்க ரெண்டு பேருக்குமே திருப்தி இல்லே. நாளைக்கு வரை ஜெயமாலா இங்கே எங்க வீட்டிலேதான் இருப்பா. மறுபடியும் நாளைக்கு உங்க உதவி ஆசிரியரையும், ஸ்டெனோவையும் இங்கே அனுப்புங்கோ” என்றாள் மேனகா. கார் விபத்தை அவள் பத்திரிகை ஆசிரியரிடம் சொல்லவில்லை.

டாக்டர் வந்தார். மூக்கில்,நெற்றியில் சின்ன பிளாஸ்திரி போட்டு விட்டு ஓர் ஏடிசி இன்ஜெக்‌ஷன் கொடுத்தார்.

“பெரிசா ஒண்ணுமில்லே. ரெண்டு நாள் ஸ்டுடியோ பக்கம் எங்கேயும் போக வேண்டாம்.கம்ப்ளீ ட்டா ரெஸ்ட் எடுத்துக்கணும்” என்று சொல்லி விட்டுப் போனார்.