பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

732

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

யாரும் எப்போதும் எங்கும் தயங்காமல் காரை எடுத்துக் கொண்டு புறப்பட முடியும். சின்ன ரிப்பேர் முதல் பெரிய ரிப்பேர் வரை எதுவானாலும், வெளியார் ஒர்க் ஷாப்பில் கொண்டு போய் விட்டுச் செலவு வைக்காமல் ரிப்பேரைத் தாங்களே பார்த்துச் சரி செய்து விடுவார்கள். மேற்படி காரணங்களால் மிகவும் சிக்கனமாக மாதம் நூற்றைம்பது- அல்லது அதிகமாகப் போனால், இருநூறு ரூபாய்க்குள் அந்தக் காரை அவர்களால் பராமரிக்க முடிந்தது. துரைராஜூ வேலை பார்த்த அமராவதி ஆட்டோமொபைல்ஸ் கார்த் தொழிற்சாலை - சகோதரர்களின் சொந்த ஒர்க் ஷாப்பிற்கு அப்பாலும் இரண்டு மைல் தள்ளி இருந்ததனால், தினசரி காலையில் சகோதரர்கள் ஐவரும் வீட்டிலிருந்து புறப்பட்டால் ,துரைராஜு மற்ற நால்வரையும் சொந்த ஒர்க் ஷாப்பில் இறக்கி விட்டு விட்டுக் காரைத் தன்னுடைய அமராவதி ஆட்டோமொபைல்ஸ் தொழிற்சாலையின் அருகே காம்பவுண்டுக்கு வெளியே எங்காவது பார்க் செய்து பூட்டிக் கொண்டு வேலைக்குப் போய் விடுவது வழக்கம். திரும்பும் போது மாலையில் சொந்த ஒர்க் ஷாப்பிற்கு வந்து கொஞ்ச நேரம் காத்திருந்து சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்புவான் துரைராஜ். இப்படித் தாராளத்திலும் ஒற்றுமை - சிக்கனத்திலும் ஒற்றுமை - என்று அந்தத் தொழிலாளிக் குடும்பம் நிம்மதியாக வாழ்ந்து வந்தாலும், சகோதரர்கள் காரில் வருவதும் போவதும் பலர் கண்களை உறுத்தியது. செளகரியமாகப் போய் வருவது - இவர்களை ஒத்த மற்ற உழைப்பாளிகளாலேயே அசூயைக் கண் கொண்டு பார்க்கப்பட்டது. இவர்கள் நிலைக்கு மேற்பட்ட பணக்கார வர்க்கத்தினரால் கேலி செய்து எள்ளி நகையாடப்பட்டது. இவ்வளவுக்கும் அவர்கள் வைத்திருந்த பழைய கார் பார்ப்பதற்குப் பளீரென்று கூட இராது. அங்கங்கே பெயிண்ட் உதிர்ந்து உள்ளே ‘ஸீட்டுக்கள்’ கிழிந்து அழுக்கடைந்து போயிருக்கும். ஆனால் உடம்புக்கு உள்ளே மனிதனுடைய ஆத்மாவைப் போல், அந்த ஓட்டைக் காருக்குள்ளே என்ஜின் மட்டும் பரம சுத்தமாக ஓடும். துரைராஜு உலகியல் தெரிந்தவன்.கார் வாங்கிய தினத்திலிருந்து ஒரு நாள் கூட அவன் அமராவதி ஆட்டோமொபைல்ஸ் தொழிற்சாலை கேட் அருகே தன் காரைக் கொண்டு போய் நிறுத்தி இறங்கியதில்லை. சராசரி இந்திய மனப்பான்மையின்படி ஏழையானாலும் சரி, பணக்காரனானாலும் சரி - இன்னொருவன் கொஞ்சம் அதிக செளகரியமுள்ளவனாயிருப்பதைப் பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ தயாராயிருக்க மாட்டார்கள். ஒன்று அதிகமாகக் கேலி செய்வார்கள், அல்லது அதிகமாகப் பொறாமைப்படுவார்கள். மேடைகளில் எல்லோரும் சமதையான செல்வம் அடைய வேண்டுமென்று பேசுவார்கள். நடைமுறையில் தொழிலாளி வெள்ளையாக உடுத்தினால், முதலாளிக்குப் பிடிக்காது. வேலைக்காரன் தலை நிமிர்ந்து நடந்தால் எஜமானனுக்குக் கோபம் வருகிற தேசம் இது. அமராவதி ஆட்டோமொபைல்ஸ் முதலாளி ஆராவமுதன் எப்படி நினைப்பாரோ என்ன சொல்வாரோ என்று பயந்துதான் எலெக்ட்ரிஷியன் துரைராஜு காரைப் பார்க் செய்வதற்கென்று தொழிற்சாலைக்குள் இருந்த இடத்திற்குத் தன் காரைக் கொண்டு வராமல் வெளியில் எங்கெங்கோ நிறுத்தி விட்டு, நடந்து வந்து கொண்டிருந்தான். அப்படி வெளியில் கண்ட கண்ட இடத்தில் நிறுத்தி விட்டு வருவதனால் காருக்குப்