பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : மனப்பான்மை

733

பல தொல்லைகள் வந்தன. கதவின் மேல் விடலைச் சிறுவர்கள் எதையாவது கீறிக் கிறுக்கி விடுவார்கள். எவனாவது குறும்புக்காரன் டயரில் காற்றைப் பிடுங்கிவிட்டுப் போய் விட்டிருப்பான்.

இப்படியெல்லாம் தொல்லைகள் இருந்தும் தொழிற்சாலைக்குள் பாதுகாப்பான இடத்தில் காரைக் கொண்டு வந்து நிறுத்தத் தயங்கி வெளியிலேயே நிறுத்திக் கொண்டிருந்த துரைராஜு, இன்று அமெரிக்காவைச் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பிய தன் முதலாளி செய்த சொற்பொழிவைக் கேட்டு மனம் மாறினான். 'டெட்ராய்ட்’ மோட்டார்த் தொழிற்சாலையில், தொழிலாளியும், முதலாளியும் அருகருகே காரில் வந்து இறங்குவதாக அவர் தம் சொற்பொழிவில் வருணித்த காட்சியைக் கேட்டுத்தான் அவனுடைய மனத்தில் இந்த மாறுதல் ஏற்பட்டிருந்தது. ‘தொழிற்சாலைக்குள்தான் கார்களைப் பார்க் செய்வதற்கென்று ஏரளமான பகுதி இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதே? முதலாளியோ முன்பு எப்படி இருந்தாலும், இப்போது இந்த அமெரிக்கச் சுற்றுப் பயணத்திற்குப் பின்பு பரந்த மனமுள்ளவராக மாறியிருப்பார்’ என்றெல்லாம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான் துரைராஜு.

‘அமராவதி ஆட்டோமொபைல்ஸ்’ தொழிற்சாலையில் உள்ளே கார் பார்க் செய்வதற்குரிய பிரதேசத்தில் நாலு கார்களை பார்க் செய்வதற்கு வெள்ளைக் கோடுகளால் அடையாளம் போட்டிருக்கும். ஆனால் அங்கு நிறுத்தப்படுவதென்னவோ முதலாளி ஆராவமுதனின் ‘காடிலாக்’ கார் ஒன்று மட்டும்தான். வேறு உயர் அதிகாரிகளை நாலைந்து பேரை வீட்டில் கொண்டு போய் விடுவதற்கும், ஆபீஸுக்கு அழைத்துக் கொண்டு வருவதற்குமாக ஒரு ‘ஆபிஸ் வான்’ உண்டு. அதைக் கூடக் காம்பவுண்டினுள்ளே எங்காவது ஒரு மூலையில்தான் நிறுத்துவார்களே ஒழியக் ‘கார் பார்க்’கில் முதலாளியின் ‘காடிலாக்’ நிற்கிற இடத்தில் அதனோடு சேர்த்து நிறுத்துவது வழக்கமில்லை.

முதலாளி அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பியதும், தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்காகச் சொற்பொழிவு செய்த மறுதினமே தைரியமாகவும், பெருமிதமாகவும், தனது பழைய காரைத் தொழிற்சாலைக் கார் பார்க் வரை கொண்டு வந்து நிறுத்தி விட்டு அப்புறம் உள்ளே வேலைக்குப் போனான் எலெக்ட்ரிஷியன் துரைராஜ். அவன் காரை நிறுத்தும் போது, கேட் அருகே இருந்து கவனித்துக் கொண்டிருந்த கூர்க்கா, ஆத்திரத்தோடு பரபரப்பாக ஓடிவந்து “இங்கே வேறெந்தக் காரையும் நிறுத்தக் கூடாது. ‘படா ஸாப் கி காடி’ (பெரிய ஐயாவின் கார்) நிற்கிற இடம் இது.” என்று தடுத்துப் பார்த்தான். ஆனால் துரைராஜூ அவன் தடுத்ததை ஒப்புக் கொள்ளாமல் பெரிய ஐயா முதல் நாள் அமெரிக்கா அனுபவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை மனத்தில் கொண்டு, “பெரிய ஐயா கேட்டால் நான் வந்து பதில் சொல்லிக் கொள்கிறேன். நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்று திமிராகப் பதில் சொல்லி விட்டான். அதன் பிறகு அவன் தன் வேலைக்குப் போய்ச் சேர்ந்தான். தன் துணிவைப் பெரிய ஐயா பெருந்தன்மையாகப்