பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

734

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பாராட்டினாலும் பாராட்டுவார் என்று துரைராஜுவின் மனம் கற்பனை செய்தது. அமெரிக்க மோட்டார்த் தொழிற்சாலைத் தொழிலாளிகளில் பெரும்பாலோர் சொந்தமாகவே கார் வைத்திருக்கிறதைப் பற்றியும், தொழிலாளி ஜான் முதலாளி ஹென்றியின் காருக்கருகே தன் காரைக் கொண்டு வந்து நிறுத்திக் கீழிறங்கி, ‘குட்மார்னிங் மிஸ்டர் ஹென்றி!’ என்று முதலாளியைப் பெயர் சொல்லி அழைத்து ‘குட்மார்னிங்’ போடுவதைப் பற்றியும் ஆராவமுதன் ஆற்றிய சொற்பொழிவைப் பற்றியே துரைராஜுவின் மனம் நினைத்துப் பூரித்துக்கொண்டிருந்தது.

ஆனால் நடந்ததென்னவோ முற்றிலும் நேர் மாறான காரியங்களாக இருந்தன. பகல் சாப்பாட்டுக்காக விடப்படும் இடைவேளையின் போது துரைராஜு வெளியில் வந்து பார்த்தால் அவனுடைய பழைய காரை நிறுத்தியிருந்த இடத்தில் காணவில்லை. அந்தப் பிரதேசம் முழுவதும் ஏக சக்ராபதிபதிபோல ஒற்றைக்கொரு தனிக்காராக - முதலாளி ஆராவமுதனின் ‘காடிலாக்’ மட்டும் பளீரென்று மின்னும் ஒளியுடன் கொலு வீற்றிருந்தது. சாவி தன் கையில் இருக்கும் போது தன் பழைய காரை, யார் எதற்காக வெளியே எடுத்துக் கொண்டு போயிருக்க முடியுமென்று புரியாமல் துரைராஜு மலைத்து நின்ற போது. முதலாளியின் ‘காடிலாக்’ டிரைவர் ஓடிவந்து துரைராஜுவை நோக்கி இரைந்தான் :

“உன் ஓட்டைவண்டியை இங்கே பார்க் பண்ணச் சொல்லி, யார் உன்னே உள்ளார நுழைய விட்டாங்க? பெரிய ஐயா பார்த்ததும் கன்னா பின்னான்னு இரைய ஆரமிச்சாரு விசாரிச்சதிலே வண்டி உன்னிதுன்னு தெரிஞ்சிது. அவர் கையிலே சொன்னேன்.

“சோத்துக்கு வழியில்லாத பசங்கள்ளாம் காரு வச்சுக்கணுமின்னு ஆசைப்படறதிலே கொறைச்சல் இல்லை.”ன்னு கோபமாகக் கத்தினாரு. அப்புறம் என்னைத் தனியே கூப்பிட்டு, “நீயும் கூர்க்கா ஆளுங்களுமாகச் சேர்ந்து இந்தத் தள்ளு மாடல் ஒட்டைக் காரை உடனே காம்பவுண்டுக்கு வெளியிலே போயி நிக்கிற மாதிரித் தள்ளிட்டுப் போயிடணும். நான் திரும்பி லஞ்ச் டயத்திலே வீட்டுக்குப் போறத்துக்காக வர்றப்போ இது இங்கே நின்னுதோ, நெருப்பை வச்சுப்பிடுவேன் நெருப்பை”ன்னு கூச்சல் போட்டாரு. நல்ல வேளையா நீ வண்டியை கியர்லே போடாமே நியூட்ரல்லே விட்டிருந்தே. அதுனாலே உன் வண்டியை வெளியிலே கொண்டு போய்த் தள்ளி நிறுத்தியிருக்கிறோம்” என்றான் காடிலாக் டிரைவர். இதைக் கேட்ட துரைராஜ் பெருமூச்சு விட்டபடியே கீழே தரையில் தனது கார் தள்ளிக் கொண்டு போகப்பட்டதன் அடையாளமான டயர் தடயங்களைப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் தயங்கி நின்றான். பின்பு தைரியமாகத் தலை நிமிர்நது நின்று தனக்குள் நினைக்கலானன்.

'மனிசனோட அனுபவம் வேறே, மனப்பான்மை வேறே. அபிப்பிராயம் வேறே, நடைமுறை வேறே. இந்தத் தேசத்துலே தலைமுறை தலைமுறையா வெறும் உபதேசம் பண்ணுறவங்களாகவே பெருகிப் போயிட்டாங்க. மனப்பான்மை வளராததுக்கு இது ஒரு காரணம். உபதேசப்படி வாழ்ந்து காட்ட ஆள் இல்லாதப் போன காரணம்