பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : இது சத்தியம்

737

“ரொம்ப நாளாயிற்றே. பஸ் ஸ்டாப்பிலே இருந்து இங்கே பக்கத்திலேதானே வீடு, பார்த்து விட்டுப் போகலாமே என்று வந்தேன். நான் உடனே இப்போது மயிலாப்பூருக்குப் போய் சம்மந்தியம்மாவைப் பார்த்து விட்டு மறுபடியும் நாளைக்கே ஊர் திரும்ப வேண்டும். எனக்குத்தான் இந்த வயதிற்கு இது ஒரு கால் கட்டு இருக்கிறதே. வயது வந்த பெண்ணைத் தனியே விட்டு வர முடிகிறதா? அந்தத் தடியன்களை (தன் பிள்ளைகளை) யெல்லாம் பார்த்துக் கொள்ளச் சொன்னால், வீட்டில் நின்று பேச அவர்களுக்கு அவகாசம் இருந்தால்தானே?” என்று கமலா அக்கா பேசிக் கொண்டே போனாள்.

“கலா, வா காப்பி சாப்பிட்டு விட்டுப் போ!” என்றாள் என் மனைவி.

‘மாமி, இங்கேயே கொண்டு வந்து விடுங்களேன்” என்று கொஞ்சுதலாய் வேண்டினாள் கலா.

காப்பி கொண்டு வந்து வைத்துவிட்டு, என்னையும் ஒரு முறைப்புப் பார்த்து விட்டுப் போனாள் என் மனைவி. அவளுக்குக் கலாவை விட ஏழெட்டு வயதுதான் அதிகம் இருக்கும். கலாவைப் போல அழகில்லை.

‘சீ சீ! அழகைப் பற்றிப் பேசிவிட்டு, பிறகு வாய் கொப்பளித்து விட்டுத்தான் அவளைப் பற்றி பேச வேண்டும்.அழகுக்கும்,என் மனைவிக்கும் அவ்வளவு நெருக்கம்’

நானும் என் மனைவியும் போன மாதம் மதுரைக்குச் சென்றிருந்தோம். காலையில் கோயிலுள் நுழைந்த நான் பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் அரைகுறை மனத்துடன் வெளியே வந்தேன். ஒவ்வொரு சிற்பத்திற்கு முன்பும் குறைந்தது அரைமணியாவது நின்று ரசித்தேன் என்றால், நான் அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்தது பொறுமையிழந்த என் மனைவிக்காகத்தான்!

“உம், உம் போகலாம், வாருங்கள். பசிக்கிறது. ஒரே மாதிரி பொம்மையை எத்தனை தரம் பார்த்துக் கொண்டு நிற்பீர்கள். கால் வலிக்கிறது!” என்று என் மனைவி துரிதப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“இதோ ஆச்சு, இதோ ஆச்சு!” என்று சிற்பங்களை வியந்த வண்ணம் புறப்பட்டேன்.

அப்படி ரசனையுள்ளமும், அழகை உபாசிக்கும் உள்ளமும் பெற்ற எனக்கு, இப்படி ஒரு மனைவி வாய்த்தாள் என்றால் அது திருமணங்கள் மேலுலகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தத்தானோ என்னவோ?

“கிளம்பு கலா! நாழிகையாகிறது. சோம்பல் படாமல் போனால்தான் வேலை நின்று போகாமல் முடியும்” என்றாள் கமலா அக்காள் உள்ளேயிருந்து வந்தபடியே.

“போம்மா! நான் வரவில்லை. நீயே போய் எல்லாவற்றையும் பார்த்துக் கொள். உடம்பெல்லாம் ஒரே வலி. எனக்குக் கொஞ்சம் தூங்கினால்தான் உடம்பு தேறும்”கலா சிணுங்கினாள். அந்தச் சிணுங்கலில்கூட அவள் அழகு மின்னிற்று.


நா. பா. II — 8