பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

738

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“கலா, இங்கேதான் இருக்கட்டுமே! நாளைக் காலை இங்கிருந்துதான் ஊருக்குப் போயேன். கூடவே பஸ் சார்ஜ் செலவழித்துக் கொண்டு போகனுமா?” என்று நான் என்னை அறியாமல் சொல்லி வைத்தேன்.

உள்ளே ‘நச்’சென்று டம்ளரை வைத்த விதத்திலிருந்து அது என் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.

“சரி போ! அதுவும் நல்லதுதான். அடி லக்ஷ்மி, நான் போய் வருகிறேன்” என்று என் மனைவியிடம் குரல் கொடுத்து விட்டு வெளியே சென்றாள் கமலா அக்கா,

அன்று ஞாயிற்றுக்கிழமை. நான் சாப்பிட்டு விட்டு ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தேன். கலாவும் குளித்துச் சாப்பிட்டு விட்டு அருகில் அமர்ந்தாள். அதிகமான ஆபரணங்கள் இல்லா விட்டாலும், தங்கச் சிலை போல் செதுக்கி விட்டஅளவான தோற்றமும், ரோஜாப் பூ போன்ற மென்மையும், முல்லைச் சிரிப்பும், நதியின் ‘கலகல’வென்னும் ஒலியைப் போல் சிரிப்பொலியும் உள்ளவள் கலா. நான் படிப்பதை விட்டு அவளையே பார்த்தேன். “என்ன மாமா பார்க்கிறீர்கள்?’ என்று கலா முறுவலித்தாள். நீண்ட பெருமூச்சொன்று வெளி வந்தது, என்னிடமிருந்து தெளிந்த குளத்தில் பெரிய பாறாங்கல்லைப் போட்டுக் குழப்பி, கலங்கடிப்பது போல் என் மனத்தை என்னவோ செய்தது.

ஏதேதோ நிராசைகள், ஆசைக் கனவுகள், மீன்கள் என அந்தக் குழம்பிய குளத்தின் மேலே நீந்தி வந்தன.

நான் மெதுவாகச் சமாளித்துக் கொண்டு, “கலா! உனக்கு நன்றாகப் பாட வருதாமே! பாடேன், கேட்கலாம்?” என்றேன். அந்தச் சமயத்தில் அந்தக் குழப்பத்திலிருந்து மீள்வதற்கு ஏதோ வழி தேவைப்பட்டது.

கள்ளம் கபடமற்ற அந்தப் பெண் உடனே இணங்கினாள். பாடுவதற்குத் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அமைதியாய்த் தயார்ப்படுத்திக் கொண்டாள்.

‘பாவயாமி ரகுநாமம்’ என்ற பாட்டு மலைப்பகுதியின் கரடுமுரடான ஏற்ற இறக்கங்களிலிருந்து சமவெளியில் பிரவேசிக்கும் நதியைப் போல, நிர்மலமாய் நிரந்தர கதியாய் தொடங்கிற்று அவள் குரல். குரலிசையில் மயங்கினேனோ, பாட்டின் பொருட் செறிவில் மயங்கினேனோ இரண்டும் கலந்து இராமாயணக் காட்சிகளை ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து கண் முன் நிறுத்திய அவளது திறமையில் மயங்கினேனோ என்று சொல்ல முடியாதபடி மெய் மறந்திருந்தேன்.

“ஆஹா! ரொம்பப் பிரமாதமாகப் பாடுகிறாள் கலா” என்றாள் என் மனைவி.

நான் பாராட்டு வழங்கக் கூடத் தெரியாமல் தடுமாறி நின்றேன். அடைந்தால் இப்படிப்பட்ட பெண்ணையல்லவா துணையாக அடைய வேண்டும் என்று என் உள்