பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : இது சத்தியம்

739

மனம் புலம்பிற்று. புயலாய் உருவெடுத்த ஏக்கப் பெருமூச்சை அடக்கினேன். அது கண்களில் கண்ணிராய்த் துளிர்ந்து நின்றது.

“என்ன மாமா அழுகிறீர்கள்?’ என்றாள் கலா கேலியாக

“சீ. சீ! அழவில்லையே, இவ்வளவு பிரமாதமாக நம் மருமாள் பாடுகிறாள் என்று ஆனந்தம்! பூரிப்பு!” என்றேன், கண்களைத் துடைத்துக் கொண்டு.

என் குரலின் போலித்தன்மை அந்தப் பேதைக்குப் புரியாவிட்டாலும், என் மனைவிக்குப் புரிந்தது. முகத்தைச் சுளித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

என் மனைவிக்கு அது மூன்றாவது பிரசவம். வாழ்க்கையின் எல்லாப் பொருமல்களையும் உள்ளத்தின் விம்மல்களையும் மீறி பூர்ண திருப்தியைத் தர வல்லது தாம்பத்திய உறவுதான்! அந்தத் தத்துவம் மட்டும் இல்லாவிடில், எண்ணிலடங்கா ஏக்கங்களையும், ஏமாற்றங்களையும் சகித்துக் கொண்டு மனித குலம் வாழ்ந்து விட முடியுமா? அப்படித்தான் நானும் வாழ்ந்தேன். ஒன்று, இரண்டு, மூன்று என்று மணமாகி நான்கு ஆண்டுகளுக்குள் ஒன்று என்னைப் போல், மற்றொன்று அவளைப் போல, மூன்றாவது ‘நான் தனி என்னைக் கண்டு பிடிக்க முடியாது’ என்பது போல் மூன்று ஒட்டு மாஞ்செடிகள்!

பேறு பெற்ற முதல் மாதத்திற்குள் இவ்வளவு நெருக்கத்தையும் திணிப்பையும் தாங்க முடியாததுபோல ‘பட்’டென்று என் மனைவியின் சரீரம் உடைந்து, முளைத்து, செடியாகி, மரமாகி கப்பும் கிளையுமாய் வாழ்ந்து, திடீரென்று நான் மொட்டை மரமாகி விட்டது போல் என்னுள் ஒரு தவிப்பு மூன்று பெரும் சுமைகளை எனக்குள் திணித்து விட்டு, நான் நிரப்பி இருந்த சூன்யத்தை இனி யாரைக் கொண்டாவது நிரப்பிக் கொள்ளுங்கள் என்று பறந்து விட்டாள்.

“பாவயாமி ரகுநாமம்,” - சூன்யத்தின் அந்தரத்தின் அந்தரத்திற்குள்ளிருந்து மெல்லிய இன்னிசை கேட்டது. அந்த எண்ணத்தை நாம் உதறித் தள்ளத் தள்ள, அது வலுவடைந்து என்னால் முடியும் என்று விஸ்வரூபமெடுத்து என் மனதை நிரப்பி என்னையும் மூழ்கடித்தது.

கலா என் வாழ்க்கையில் பங்கு பெற்றாள்! அவள் அன்று பாடிய போது, “கலா, உன்னையும் உன் இசையையும் ரசிக்கும் நல்ல மாப்பிள்ளையைத் தேடித் தருகிறேன்” என்று மனமுவந்து சொன்னது இப்படியாகும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

இன்று கலா வருகிறாள்! எது எட்டாக்கனி,இனி கிட்டாது என்று மருகினானோ, அதுவே ஆச்சரியப்படத்தக்க விதத்தில் எனக்குக் கிட்டிவிட்டது.எந்த அழகைத் தொட முடியாமல் பூஜிக்க முடியாமல் தவித்தேனோ, எந்த இசையை என்னுள் எனக்கு மாத்திரம் என்று நிரப்பிக் கொள்ளத் துடித்தேனோ, அதையெல்லாம் எடுத்துக் கொண்டு முன்னிலும் பன்மடங்கு எழில் மங்கையாகத் தன்னை அர்ப்பணித்துக்