பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

742

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

சொல்லப்போறதுலேருந்து எந்த மாதிரியின்னு நீங்க புரிஞ்சிக்க முடியும். எங்க அம்மா இருக்காளே. அவளுக்குத் திமிர் அதிகம். இது நேக்கு எப்படித் தெரியும்னு கேட்பேள். அதைத்தானே சொல்லப் போறேன் இப்போ. எங்கம்மா. தினம் தினம் சாயங்காலம் ஷோக்கா டிரஸ் பண்ணிட்டு ராமாயணம் கேட்கப் போவா. அம்பத்திரெண்டு வயசுக்கு மேலே பட்டுப் புடவையும், நகையும், பவுடர் பூச்சும், சந்திரப் பிறை மாதிரி மல்லிகைப் பூவைச் சுற்றி விட்டுக் கொண்டை போட்டுக்கறதும் நேக்கே பிடிக்கலை. இதைப் பற்றி எங்க வீட்டுக் கார் டிரைவர் ஒரு நாள் தனக்குத் தானே பேசிக்கிறாப்பிலே எங் காதுலையும் கேட்கும்படி சொன்னான் : அவன் சொன்னதைக் கேட்டு நேக்குக் கோபம் வரலை. - -

“பல்லெல்லாம் பொக்கையாயித் தலை நரைச்சுப் பேரன் பேத்தி எடுத்தாச்சு ஆனா. மனசிலே என்னமோ இன்னும் ரதி கணக்காகத்தான் எண்ணிக்கிட்டிருக்கா…” - டிரைவர் இப்படிச் சொன்னது கேலியா, குத்தலா, கிண்டலா - என்னன்னு நேக்குத் தெரியாது.ஒரு பெரிய மனுஷாள் வீட்டுக் கார் டிரைவர், அவா மேலே கொஞ்சம் கூடப் பயபக்தி இல்லாமே இப்படி எல்லாம் பேசலாமோன்னு நீங்க சந்தேகப்படுவேள். ஆனா, எங்காத்து நிலைமை வேறே. டிரைவரைக் கண்டா அம்மாவுக்குப் பயம். அப்பாவுக்கும் பயம். ரெண்டு பேருமே அவனை எதிர்த்துப் பேச மாட்டா. அவா ரெண்டுபேரும் ஓரளவுக்கு அவன் கிட்டப் பயப்படறதும் நேக்குத் தெரியும். அம்மா இருக்காளே அம்மா; அவ தன்னையொத்த பணக்காரர் வீட்டுலே கொழந்தை பொறந்தா - அந்தக் கொழந்தைக்குத் தொட்டில் இடற நாள்லே போய்ப் பார்த்துட்டு வருவா.வெள்ளிக்கிண்ணம் ‘எவர்ஸில்வர்ப் பாலாடைன்னு’ ஸ்டேட்டஸ்க்குத் தகுந்த மாதிரிப் பிரஸன்டேஷனும் எடுத்திண்டு போயிட்டு வருவா. டிரைவர், தோட்டக்காரன், இவாள் வீட்டுலேயும் கொழந்தை பிறக்கும். ஆனா அதுக்கெல்லாம் தொட்டில் கிடையாது. அம்மாவும் போக மாட்டா. எப்பவாவது டிரைவரையோ, தோட்டக்காரனையோ பார்க்கறப்போ, “ஏண்டா! நோக்குக் கொழந்தை பெறந்திருக்காமேடா? என்னது? ஆணா? பொட்டையா?” என்று விசாரிப்பதோடு நிறுத்திண்டுடுவா அம்மா. எங்க ஸ்டேட்டஸுக்குத் தகுந்த மத்தப் பணக்கார வீடுகளிலே நடக்கிற கலியாணம், இழவு, எல்லாத்துக்கும் அம்மாவும், அப்பாவும் காரிலே தவறாமல் போயிட்டு வந்திடுவா. மத்தப் பணக்காராளும் அதே மாதிரி எங்க வீட்டுக்கு வருவா. கார் டிரைவர் ஒருநாள் அம்மாவுக்கு முன்னாலே (அம்மா வந்து நின்னது தனக்குத் தெரியாதுங்கிறது டிரைவரோட வாக்குமூலம்) சிகரெட் பிடிச்சான்னு அம்மா தாறுமாறாக் கத்திண்டிருந்தா, டிரைவரோ “உங்களுக்குப் பிடிக்கலேன்னா என்னை வீட்டுக்கு அனுப்பிசிடுங்கம்மா! ஆனா வார்த்தை செலவழிச்சிப் பேசாதீங்க. நான் ரோஷக்காரன். பதிலுக்கு எதைக் கேட்பேன்? எப்படி வாயிலே வரும்னு தெரியாது…” என்று டிரைவர் முறைச்சதும் அம்மா, அப்பா ரெண்டு பேருமே அவனைத் தன்னைக் கட்டிக்கிண்டு சாந்தமாப் பேச ஆரம்பிச்சா. அதான் எனக்குப் புரியலை. டிரைவர் தனக்கு முன்னாலே சிகரெட் பிடிச்சான்னு கோவிச்சிக்கிற இதே அம்மா முந்தா நாள் பிரமீளா ஆத்துக்காரர் (அவர் ஒரு வெள்ளைக்காரன் கம்பெனியிலே மாசம் மூவாயிரம் ரூபாய்க்கு மேலே சம்பளம் வாங்குகிறவர். பிரமீளா