பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : நான் ஒரு அரிஸ்டாக்ரட்

743

அம்மாவின் தங்கை பெண்) வந்திருந்தப்போ அவர் சிகரெட் பிடிக்கிறதுக்காக ஆஷ்டிரேயைத் தானே எடுத்திண்டு போய் மேஜை மேலே வச்சாளே! அது மட்டும் ஏனாம்? நான் ஒரு நாள் அம்மாவைக் கேட்கவே கேட்டுப்பிட்டேன். “ஏம்மா! மோட்டார் கம்பெனி டைரக்டர் மோகனராவ் வீட்டுலேயும், சார்ட்டர்ட் அகெளண்டண்ட் சாரநாத ஐயர் வீட்டுலேயும், சோனியும், சூம்பலுமாப் பெறக்கிற கொழந்தையைப் போய்ப் பார்த்துக் கொஞ்சித் தொட்டிலிடறதுக்கும் போயிட்டு வரயே…? நம்மாத்துக் கார் டிரைவர் கன்னையனுக்கும், தோட்டக்காரச் சுப்பனுக்கும் குண்டு குண்டா அழகான குழந்தை பொறந்திருக்கு. அதைப் பற்றிக் கேட்கறப்போ மட்டும் தோட்டக்காரனிட்டயும், டிரைவரிட்டவும், ஏதோ மாடு கன்னு போட்டதைப் பற்றி விசாரிக்கிற மாதிரிப் பரம அலட்சியமா விசாரிக்கறயே. அது ஏன் அப்படி?ன்னு நான் கேட்டகேள்விக்குப் பதிலே சொல்லாமே, மூஞ்சியைச் சுளிச்சிட்டுப் போயிட்டா அம்மா. அப்பாவிடம் கேட்டேன். “போடா அசடு! உன் வேலையைப் பார்த்திண்டு போ…” என்று பதில் வந்தது அப்பாவிடமிருந்து. எனக்கு நல்லது கெட்டது தெரியற வயசாகலேன்னு அப்பாவும், அம்மாவும் சொல்றா. ஆனா அது பொய். அப்பா செய்யற. கெட்டதும் எனக்குத் தெரியறது. அம்மா செய்யற கெட்டதும் எனக்குத் தெரியறது. ஆனா நான் அதை எல்லாம் சொல்றதுக்கு முடியாது. ‘எனக்குச் சித்த ஸ்வாதீனமில்லே’ன்னு அப்பாவும், அம்மாவும் எல்லாரிட்டயும் சொல்லியிருக்கா. ஏதோ ‘டெலீரியம்’னு ஒரு பைத்திய வியாதியாமே! அது எனக்கு வந்திருக்காம்.”நான் பண்ண பாவம்! பிள்ளையாப் பெறந்தது ஒண்ணு! அதுவும் இப்படி டெலீரியத்தோடப் புத்தி இல்லாமே வந்து வாய்த்தது” என்று அப்பா அடிக்கடி என்னைப் பற்றிக் குறிப்பிட்டுக் குறைப்பட்டுக் கொள்வார். ஆனாலும் எனக்கு அப்பாவைப் பிடிக்காது. காரணம் என்னங்கிறேளா? அப்பாவோடரகசியமெல்லாம் நேக்குத் தெரியும். பகல்லே சங்கராச்சாரியார் படத்தை வச்சிப் பூஜை பண்றவர், ராத்திரிலே கிளப்புக்குப் போய்ச் சீட்டாடறார். காசு வச்சிச் சீட்டு விளையாடறார்னு டிரைவர் சொல்றான். இன்னொரு விஷயம்-அப்பாவோட பெட்ரும்லே ஒரு ரகசிய அலமாரி இருக்கு. அதை மறந்து கூட அப்பா திறந்து வைக்க மாட்டார். ஒரு நா, தப்பித் தவறி திறந்து போட்டுட்டார். நா அடக்க முடியாத ஆசையோடு போய்ப் பார்த்தா, அலமாரிலே பாட்டில் பாட்டிலா இருந்தது. பாட்டில் மேலே எல்லாம் விஸ்கி, பிராந்தின்னு அழகான இங்கிலீஷ் எழுத்திலே எழுதியிருந்தது. விஸ்கி, பிராந்தின்னா என்னன்னு நேக்குப் புரியலே. டிரைவர்தான் இதுலே எனக்குக் குரு. அவன்கிட்டப் போய் கேட்டேன். “உங்கப்பன் ஒரு குடிகாரண்டா!”ன்னு அவன் ஆத்திரத்தோடு, ஆனால் இரகசியமான குரலில் என் காதருகே வந்து முணுமுணுத்தான். எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. கரி மங்கலம் கணபதி சாஸ்திரி குமாரர் ஆஸ்திக ரத்தினம் சம்பு சாஸ்திரி ஒரு குடிகாரர்னு அவர் பிள்ளையாகிய நானே கோவில் கோபுரத்தின் மேலே ஏறிச் சொன்னாக் கூட யாரும் கேட்க மாட்டாளே. அப்புறம் இன்னொரு ரகசியத்தை நானே என் கண்ணாரக் காணும்படியாச்சு. எங்க வீட்டுலேயிருக்கிற அத்தனை பாத்ரூமையும் கழுவறத்துக்காக ஒரு ஒட்டச்சி - சின்ன வயசுக் குட்டி அவ பேரு மாரியாத்தாளோ, காளியாத்தாளோ, என்னவோ-வருவா, ஒருநா, அவ இருட்டோட இருட்டாக் காலம்பற அஞ்சு மணிக்கு