பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : நான் ஒரு அரிஸ்டாக்ரட்

745

ஒன்பது இடத்திலே இப்படித்தான் இருக்குது; விட்டுத் தள்ளு’ என்று கூறி விட்டு வேஷ்டியைத் தட்டிக் கொண்டு எழுந்திருந்தான். அதை இப்ப நினைச்சுப் பார்த்தா எனக்குப் புரியறது. நா வேதனைப்படறேன். கரிமங்கலம் கணபதி சாஸ்திரிகள் குமாரர் ஆஸ்திக ரத்தினம் சம்பு சாஸ்திரிகளுக்கு மகனாகப் பிறந்து, தொலைந்ததை விட டிரைவர் கன்னையனுக்கோ, தோட்டக்காரச் சுப்பனுக்கோ மகனாகப் பிறந்திருந்தால் கூட நான் மானத்தோடே நிமிர்ந்து நடக்க முடியும். அம்மா இராமாயணம் கேட்கப் போற அழகு நாளுக்கு நாள் சூர்ப்பனகையா மாறிண்டு வரா. அப்பா சங்கராச்சாரியரைப் போய்ப் பார்த்துப் பேசிப்பிட்டுப் பஞ்சகச்சம் கட்டிண்டு கிருத்திகை விரதம், ஏகாதசி விரதம், துவாதசி பாரணை எல்லாம் இருந்து உலகத்தை மருட்டிப்பிட்டுச் சூதாட்டமும், குடியும் கூத்துமாக இருக்கார். நல்ல ‘அரிஸ்டாக்ரஸி’ இது! என்னையும் நாளைக்கி உலகம் இப்படித்தானே ஓர் ‘அரிஸ்டாக்ரட்’னு சொல்லும், ஐயையோ! வேண்டவே வேண்டாம்.நா செத்துப்பூட்டாக் கூடத் தேவலை, இந்த அப்பா, அம்மாவுக்குப் பிள்ளையாப் பொறந்ததுக்காகப் பெருமைப்படறதுக்கு ஒண்ணுமில்லை. கோபத்துலே ஒருநாள் டிரைவர் கூட, 'ஏலே! அம்பீ! நீ யாரை அப்பான்னு கூப்பிடறே? சமையற்கார ஐயரை அப்பான்னு கூப்பிடுடா, பொருத்தமா யிருக்கும்’னு ஒரு தினுசாச் சிரிச்சிண்டே சொல்லிப்பிட்டான். எனக்கு ரோஷம் வரலை. கோபமும் வரலை. ரோஷமும், கோபமும் வராப்பிலேதான் எங்க அப்பா, அம்மா என்னைப் பெறலையே? நா எண்ண பண்ணட்டும்?

(1967-க்கு முன்)