பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : வாத்தியங்கள்

747

மதிப்பற்ற மூலதனம்” - என்பது போன்ற போர்டுகள் தென்பட்டுப் பயமுறுத்தும். இவை எல்லாம் பிரின்ஸிபால் அம்மாள் அளித்த போர்டுகள்.

இந்த போர்டுகளையோ, சாவித்திரியையோ, யாராவது மாணவி கேலி செய்தால் கூட உடனே அந்த மாணவியைப் பற்றி தனக்கு ரிப்போர்ட் செய்யுமாறு கூறியிருந்தாள் பிரின்ஸிபால் அம்மாள்.

‘சாவித்திரிக்'குப் பயந்து பாதிப் பேர் - பிரின்ஸிபால் அம்மாளுக்குப் பயந்து பாதிப்பேர் - என்று மாணவிகள் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அடங்கியிருந்தார்கள்.

ஆனால், உண்மையில் சாவித்திரிக்குத்தான் மனப்பூர்வமாக இந்தக் கடுமையில் விருப்பமில்லை. சமீப காலம் வரை ஒரு கல்லூரியில் கலகலப்பான மாணவியாக இருந்து விட்டு வந்து, இப்போது கலகலப்பான மாணவிகளை இப்படி அடக்குவதைச் சிரமமான வேலையாகவே உணர்ந்தாள் அவள். தன் தலைக்கு மேலும் அறைக்கு மேலும் தொங்கிய போர்டுகள் எல்லாம் அவளுக்கே காட்டுமிராண்டித் தனமாகத் தோன்றின. எப்படியோ என்றாலும் இந்த வார்டன் பொறுப்பை ஏற்று ஓர் ஆறு மாதம் ஓட்டியாயிற்று.

எத்தனையோ இளம் பெண்களிடம் புதிய டிசைன் புடவையிலிருந்து அந்த ஊரில் நல்ல வாசனையான மல்லிகைப்பூ எங்கே கிடைக்கும் என்பது வரை விசாரிக்க வேண்டும், சிரித்துப் பேச வேண்டும், அரட்டையடிக்க வேண்டும் என்றெல்லாம் அவளுக்கும் உள்ளூற ஆசை உண்டு.

ஒரு நாள் மின்சாரக் கோளாறினால் விடுதியில் இரவு ஏழு மணிக்கு எல்லா விளக்குகளும் போய் விட்டன. எலக்ட்ரிசிடி அலுவலகத்துக்கு ஃபோன் செய்து விட்டு மிஸ் சாவித்திரி எம்.ஏ. வராண்டாவில் நின்று கொண்டிருந்தாள். அவள் அங்கு நிற்பது இருளில் தெரியாததால், எதிர்த்த அறை வாயிலில் கூடியிருந்த பெண்கள் கூட்டம் ஒன்று சிரிப்பும் கேலியுமாகத் தங்களுக்குள் உரையாடலாயிற்று.

“ஏண்டி! நம் வார்டன் மிஸ். சாவித்திரி இப்பவே இப்பிடியிருக்காளே..? ஒரு வேளை இங்கே இப்பிடிக் கடுமையாயிருந்து பழகிப் பழகி நாளைக்குக் கலியாணமானால் புருஷன் கிட்டக் கூடக் கடுமையாகவே எல்லாம் வந்துவிடும். 'குறையப் பேசி நிறைய உணர்த்து’ ‘அநாவசியமாகச் சிரிக்காதே’ என்றெல்லாம் கணவனுக்கே உத்தரவு போடுவாள் இல்லையா?” “அதனால்தான் ஒரு காலேஜ் வாத்தியாரம்மாவுக்கும் கணவனே கிடைப்பதில்லை.”

இந்த உரையாடலின் போதே திடீரென்று விளக்கு வந்தால் தான் அங்கு நிற்பதை அவர்கள் பார்த்துக் கூச்சமும், பயமும் அடையப் போகிறார்களே என்று உள்ளூற வருந்திய சாவித்திரி உடனே இருளில் தன் அறைக்கு விரைந்தாள்.

ஆனால் என்ன துரதிர்ஷ்டம்? அவள் இரண்டடி எடுத்து வைத்ததுமே, எல்லா விளக்குகளும் பளிச் சென்று எரியத் தொடங்கிவிட்டன.