பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

748

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மாணவிகள் குரல் ஒலிகள் மந்திரம் போட்டது போல் அடங்கின. மிஸ், சாவித்திரியும் அங்கேயே நிற்பது தெரிந்தவுடன், ஒருத்திக்காவது முகத்தில் ஈயாடவில்லை. சாவித்திரியோ ஒன்றுமே அறியாதவள் போல், “அதுதான் லைட் வந்துவிட்டதே...? ஏன் நிற்கிறீர்கள்? அவரவர் அறைக்குப் போய்ப் படியுங்களேன்? நேரத்தை வீணாக்கக் கூடாது” என்று சுபாவமாகச் சிரித்துக் கொண்டே கூறி விட்டு வந்தாள்.

ஆனால் அறைக்கு வந்ததும், அந்தக் கேலிக்குரல்களே காதில் மறுபடி மறுபடி ஒலித்தன.

‘ஏண்டிமிஸ் சாவித்திரிக்குத் திருமணமானால்..?’

அந்தக் குரல்களுக்குரியவர்களை அவளுக்கு நன்றாகத் தெரியும்!

‘ஒரு காரியம் செய்தால் என்ன?’ - என்று தோன்றியது சாவித்திரிக்கு. அப்படிப் பேசியவர்களையே வரவழைத்து, “பெண்களே! நீங்கள் நினைப்பது போல் நான் ஒன்றும் அவ்வளவு கடுமைக்காரி இல்லை. ஏதோ கடமைக்காக பிரின்ஸிபால் அம்மாள் சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கிறேன். என்னுடைய கல்லூரி நாட்களில் உங்களை விடக் கலகலப்பாக இருந்தவள் நான்.” என்று சொல்லி விட்டால் என்ன? இந்தக் கடுமைத் திரையை இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் கிழித்தெறிந்தால் ன் என்ன? என்று தோன்றியது அவளுக்கு முதல் வேலையாகக் காலையில் அந்த மாணவிகளைக் கூப்பிட்டனுப்பிப் பேசுவது என்று முடிவு செய்து கொண்டாள் சாவித்திரி.

அந்தக் கல்லூரியில், மட்டும் ஒரு வழக்கம் உண்டு. எவ்வளவுக்கு எவ்வளவு கடுமையோ, அவ்வளவுக்கவ்வளவு குற்றத்தை ஒப்புக் கொள்ளுகிற மாணவிகளை பிரின்ஸிபால் மன்னித்து விடுவாள். இருந்தும் கூட, இந்தப் போர்டுகளும் இந்த இளம் வயதிலேயே ஒரு சட்டாம்பிள்ளைக் கடுமையும் - சாவித்திரிக்குச் சலிப்பாயிருந்தன.

காலையில் விடிந்ததும், காபி டயம் முடிந்தவுடன் ஒரு துண்டுத் தாளில் முதல் நாளிரவு - மின் விளக்கு அணைந்த இருளில் - தன்னைப் பற்றிக் கேலி பேசிய மாணவிகளின் பெயர் - அறை எண் எல்லாம் குறித்து ஹாஸ்டல் ப்யூனை கூப்பிட்டு அவர்களை அழைத்து வரச் சொன்னாள்.

- சிறிது நேரத்தில் ப்யூன் திரும்பி வந்து அவர்கள் அறையில் இல்லை என்று தெரிவித்தான்.

‘இத்தனை அதிகாலையில் எங்கே போயிருப்பார்கள்?’ - என்று முதலில் வார்டன் என்ற முறையில் கோபம் தலை எடுத்தாலும், சாவித்திரி அதை அடக்கிக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து வார்டன் அறையிலிருந்த டெலிபோன் மணி கிணுகிணுத்தது. சாவித்திரி ஓடிப் போய் ரிஸீவரை எடுத்தாள். -

“ஹலோ! யாரு? மிஸ், சாவித்திரியா? நான்தான் பிரின்ஸிபால் பேசறேன். ஸ்டூடன்ஸ் வனஜா, அம்மு, குமுதா-மூணு பேரும் இங்கே வந்திருக்காங்க...நேத்தி ராத்திரி