பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : வாத்தியங்கள்

749

கரண்ட் பெயிலானப்ப - நீ வராண்டாவிலே நின்னுக்கிட்டிருக்கிறது தெரியாமே உன்னைப் பத்தி ஏதோ கிண்டலாப் பேசினாங்களாமே. அதைத் தாங்களே வந்து எங்கிட்டச் சொல்லி, “இனிமே அப்பிடிப் பேசலே! வார்டனே இதைப்பத்தி உங்களுக்கு ரிப்போர்ட் பண்ணுவாங்க. நீங்க இந்தத் தடவை எங்களை மன்னிச்சிடனும்”கிறாங்க.. ஆனா நான் அதை ஒத்துக்கலை. தலைக்கு அஞ்சு ரூபாய் ஃபைன் போட்டிருக்கேன், உங்கிட்ட வந்து மன்னிப்பும் கேட்கச் சொல்லியிருக்கேன்…”

சாவித்திரி உடனே அவசரமாகக் குறுக்கிட்டாள்.

“சே! சே! அவ்வளவு சீரியஸ்ஸா பனிஷ் பண்ணியிருக்க வேண்டாமே! நானே இதை ஒண்ணும் தப்பா எடுத்துக்கலே... தயவு செய்து ஃபைனை மட்டுமாவது கான்ஸல். பண்ணிடுங்களேன்…”

“நோ நோ! உனக்குத் தெரியாது. இதெல்லாம் ஸ்டிரிக்ட்டா இருக்கணும். ஐ ஷல் ஸெண்ட் தி கேர்ல்ஸ்... டு யுவர் ரூம்...” என்று கண்டிப்பாகச் சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் பிரின்ஸிபால் அம்மாள்.

- மிஸ், சாவித்திரிக்கு மிக மிக வேதனையாக இருந்தது. ஓர் உறவை மிக மிகச் சுமுகமாக்க அவள் முனைந்த வேளை பார்த்து இப்படி அது மிக மிகக் கடுமையானதில் அவள் நொந்து போனாள். ஒன்றும் ஓடவில்லை.

மாணவிகள் வந்தார்கள். “வாருங்கள்! நீங்கள் இதை ஏன் பெரிது படுத்திக் கொண்டு பிரின்ஸிபாலிடம் போனீர்கள்…? நானே இதை ஒண்ணும் தப்பா நினைக்கலியே! நான் படிக்கறப்ப எங்க லெக்சரர்ஸைப் பற்றி எத்தனையோ தடவை இப்படிப் பேசியிருக்கேன். இதெல்லாம் சகஜம்…”

- என்று சாவித்திரி கூறியதற்கு விளைவே இல்லாமல், மூன்று பேருமே இயந்திரங்கள் பேசுவது போல் இயங்கி,

“எங்களை மன்னிக்கணும்” - என்று மட்டும் கூறி விட்டு நகர்ந்தார்கள். சாவித்திரிக்கு என்னவோ போலிருந்தது அவர்கள் தன் சுமுக பாவத்தை நம்பவில்லை என்றே தோன்றியது. அவள் சித்த பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்து விட்டாள்.

அன்று மாலையிலேயே மறுபடியும் இரண்டு போர்டுகள் பிரின்ஸிபால் அம்மாளின் உத்தரவுப்படி அவள் அறையிலே கொண்டு வந்து மாட்டப்பட்டன.

“வார்டனைப் பற்றிப் புறம் பேசுவது தவறு”

“நீங்கள் புறம் பேசும் ஒவ்வொரு சொல்லும் யாரைப் பற்றியோ அவர்களுக்கும் செவி உண்டு”

- மிஸ். சாவித்திரி எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் பிரின்ஸிபால் அம்மாள் அந்த போர்டுகளை வார்டனின் அறையில் மாட்டியே தீர வேண்டுமென்று உத்தரவு போட்டு விட்டாள்.