பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101. வாத்தியங்களும் விரல்களும்

“வெய்ட்டிங் ஃபார் ரிஸல்ட்” என்று அப்ளிகேஷன் போட்டதும், ரிஸ்ல்ட் வந்ததும் அவசர அவசரமாகப் பாஸாகி விட்டதைத் தெரிவித்ததும் எவ்வளவு வேகமாக நடந்தனவோ அவ்வளவு வேகமாக “ஆர்டர்” வந்ததும் ஆச்சரியமாகவே இருந்தது. டெம்பரரியாக ஒரு வருஷத்துக்குத்தான் ஆர்டர் போட்டிருந்தார்கள் என்றாலும், அதுவாவது கிடைத்ததென்பதே அவனைப் பொறுத்த வரை பெரிய விஷயம்தான். சமஸ்கிருதம் உள்ள பள்ளிகளே குறைவு. அதிலும் ஒரு முழு நேர ஆசிரியர் போடுகிற அளவு சமஸ்கிருத மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்கள் நாளுக்கு நாள் குறைந்து வந்தன. அதனால் நாற்பது மைல் தள்ளி உள்ள கிராமமென்பதை அவன் ஒரு குறைவாக எண்ணவே இல்லை. ஒப்புக் கொண்டு மறுதினத்தன்றே புறப்பட்டு மாலையில் போய்ச் சேர்ந்தான். -

மறுநாள் விடிந்ததும் அந்தக் கிராமத்தின் விடிகாலை நேர வனப்புகள் எல்லாமே அவன் மனத்தைக் கவர்ந்தன. ஸ்கூல் ப்ரேயர் நடந்து கொண்டிருந்தது. கைக்கெட்டுகிற தூரத்தில் வரிசை வரிசையாகப் பட்டுப் பூச்சிகள் போல அணி வகுத்து நின்று கொண்டிருந்த பெண்களின் கூந்தல் மல்லிகை கம்மென்று பாய்ந்து வந்து நாசியை நிறைத்தது. ப்ரேயர் பாடலின் தேன் நெகிழ்வது போன்ற குரலினிமை, புஷ்பங்களின் எல்லையற்ற வாசனை, காலை நேரத்தின் சுகம், வேப்ப மரங்களின் மெல்லிய இலையசைவு, தொலைவில் சாம்பல் பூத்த நிறத்தில் தெரியும் சில மலைகள் எல்லாம் சேர்ந்து சுந்தரராஜனின் மனத்தைக் கவ்வி எதையோ தூண்டின. முந்தாநாள் “அப்பா யிண்ட்மெண்ட் ஆர்டர்” கிடைத்து, நேற்று மாலையில் கலாசாலை மூடுவதற்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது பஸ்ஸில் நாற்பது மைல் பிரயாணம் செய்து வந்து அவசர அவசரமாக ”ஜாயினிங்ரிப்போர்ட்” எழுதிக் கொடுத்து விட்டு ‘புது சான்ஸ்கிரிட் பண்டிட்’ என்ற பெயருடன் இன்று காலையில்தான் அந்தப் பள்ளிக் கூடத்தின் முதல் முழு நாளைச் சந்திப்பதற்கு உள்ளே வந்திருந்தான் சுந்தரராஜன்.

ஒரு பெரிய நகரத்தின் நாற்பதாவது மைலில் சுற்றிலும் பல மைனர் பஞ்சாயத்துக் கிராமங்களையும், மலையடிவாரத்துச் சிற்றூர்களையும் கொண்ட மேஜர் பஞ்சாயத்து ஊர் ஒன்றில் ஒரு பள்ளி ஆசிரியருக்குப் பிரமுகரின் அந்தஸ்து என்பது எட்ட முடியாத விஷயம் ஒன்றுமில்லை. ஒரு சாதாரண மனிதனுக்குக் கிடைப்பதை விடக் குறைவான வாழ்க்கை வசதிகளையும், அதிகமான அல்லது அநாவசியமான அந்தஸ்தையும், வேண்டாமென்றாலும் கேட்காமல் ஓர் ஆசிரியனுக்குத் தந்து விடுவது கிராமங்களில் தவிர்க்க முடியாதது. ஒரியண்டல் காலேஜில் ஐந்து வருஷம் படித்து விட்டு ரிஸ்ல்ட் வந்தவுடன் கிடைத்த முதல் உத்தியோகமாகையினால் ஊரைப் பற்றிப்