பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

752

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பொருட்படுத்தாமல் அதற்கு ஒப்புக் கொண்டான் அவன். ரா கிராஜுவேட்டாகக் கல்லூரியிலிருந்து வெளி வரும் ஒரு அன்-ட்ரெயின்ட் டீச்சருக்கு இந்த நாட்களில் வேலை கிடைப்பதிலுள்ள சிரமங்கள் எல்லாம் அவனுக்கும் தெரியும், இதையெல்லாம்விடப் பெரிய விஷயம், அரு ஒரு கோ - எஜுகேஷனல் ஸ்கூல். வயது முதிர்ந்த சமஸ்கிருதப் பண்டிதர் ஒருவரையே அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். கிடைக்காத காரணத்தால்தான் தன்னைப் போல் ஓர் இளைஞனை ‘அப்பாயின்ட்’ செய்ய சேர்ந்தது என்பதும் அவனுக்குத் தெரியும். வயது முதிர்ந்தவர் கிடைத்தால், தன்னைத் தூக்கி விடுவார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும்.

அந்த ஊர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த ஊரின் ஆற்றங்கரையும், மாந்தோப்பும், கால்களில் கொலுசு அணிவதை இன்னும் அநாகரிகமாகக் கருதாத பேதைமை நிறைந்த பெண்களும், அவர்களின் பேசுவது போன்ற பார்வையும், பார்ப்பது போன்ற புன்னகையும், புன்னகை போன்ற நோக்கும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.

அவனுடைய பொழுது போக்கு பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதுவது. அந்தக் காரியத்திற்கு இந்த ஊர் மிகவும் பொருத்தமாயிருக்கும் போலத் தோன்றியது. எந்த இடத்தில் பூக்களின் மணம் மனத்துக்குள்ளே மறைந்து கிடக்கும் வேறு பல்லாயிரம் மணங்களைக் கிளறச் செய்கிறதோ, எந்த இடத்தில் கேட்கும் இசை மனதிற்குள் கேளாமலிருக்கும் வேறு பல இசைகளைச் சுருதி கூட்டி மீட்டுகிறதோ, அந்த இடத்தில் பிறவாத கற்பனை வேறெந்த இடத்தில்தான் பிறக்கப் போகிறது?

ஃபோர்த் பாரம், பிஃப்த் பாரம், எஸ்.எஸ்.எல்.சி.ஆகிய மூன்று உயர் வகுப்புகளில் மொத்தம் பதினேழு பேர். மாணவர்களும், மாணவிகளுமாக சமஸ்கிருதம் எடுத்திருந்தார்கள். ஃபோர்த் பாரத்தில் மூன்று பேர், பிஃப்த் பாரத்தில் ஆறுபேர், எஸ்.எஸ்.எல்.சியில் எட்டுப் பேர். இவ்வளவுதான் அந்தப் பள்ளியில் சமஸ்கிருத மாணவிகளின் எண்ணிக்கை. அவன் வேலை மிக மிகக் குறைவுதான்.

நாலாவது பாரத்தில் இருவர் பையன்கள், ஒருத்தி பெண். ஐந்தாவது பாரத்தில் நாலு பையன்கள், இரண்டு பெண்கள். எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் சமஸ்கிருதம் எடுத்திருந்த எட்டுப் பேருமே பெண்கள்.

நாலாவது பாரம் அவனுக்கு ருசிக்கவில்லை. மொத்தம் மூன்று பேர். அதில் இரண்டு பையன்களும் நோட்ஸ், நோட்ஸ் என்று பரீட்சைக்கு நோட்ஸ் கேட்பதிலேயே கண்ணாயிருப்பவர்கள்.ஒருத்திபெண். அவளும் ஊமைக் கோட்டான். பேசவே மாட்டாள். ஐந்தாவது பாரத்தில் பையன்கள் நாலு பேரும் சுமார். பெண்கள் இருவரும் படு அரட்டைகள். விஷயங்களின் நயங்களை ரசித்து ஆசிரியருக்குச் சொல்லித் தருவதில் ஊக்கம் தருவதற்கோ, ஹாஸ்யத்தில் ஈடுபட்டுச் சிரிப்பதற்கோ கூடப் பயப்படும் வயது அவர்களுக்கு. ஆகவே அந்த வகுப்பிலும் சுந்தரராஜன் என்ற வாலிப வயது ஆசிரியனுக்கு உற்சாகமில்லை.

அவனுடைய உற்சாகமெல்லாம் எஸ்.எஸ்.எல்.ஸி. வகுப்பில்தான். அந்த வகுப்பில் எல்லோருமே நினைவறிந்த “பெரிய” பெண்கள். அவர்களின் விழிப் பார்வை,