பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : வாத்தியங்களும் விரல்களும்

753

புன்னகை, கலீர் கலீர் என்று ஹாஸ்யத்துக்குச் சங்கீதமாய் நகைக்கும் ரசிகத் தன்மை. எல்லாமே அந்த வகுப்புக்கு எப்போது போவோம், எப்போது போவோம் என்று அவனையே, எண்ணி ஏங்கச் செய்தன.

எஸ்.எஸ்.எல். ஸி. வகுப்பிலிருந்த எட்டுப் பெண்களில் இருவர் மிகவும் சிறியவர்கள். பாவாடை, சட்டை தாண்டாத வயது. நாலு பேர் தாவணி போடுகிற பருவத்தினர். இருவர் ஆறு கெஜம் புடவை, ஜாக்கெட் அணிகிற அளவு செழிப்பான இளமையின் எல்லையில் வந்து நிற்கிறவர்கள். அவர்களில் ஒருத்தி புவனேஸ்வரி.ஒவ்வொரு நாளும் ஒரு தடவையாவது அவளைப் பார்த்து விட வேண்டும் என்று அவனை அந்தரங்கமாகத் தவிக்கச் செய்தவள் அவள். இவ்வளவு அழகான பெண்ணை இது வரை வாழ்க்கையில் அவன் பார்த்ததில்லை. அவனுக்குக் கற்பிக்கப்பட்ட காவியங்களில் மட்டுமே பார்த்திருந்தான். இப்போதுதான் முதன் முதலாக வாழ்வில் பார்த்தான்.

அவன் அந்தப் பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதமாகியும், புது வாத்தியார்’ப் பட்டம் மட்டும் அப்படியே இருந்தது.

நாலாவது மாதம் ‘குவார்டர்லீ’ பரீட்சை முடிந்து மறுபடி பள்ளிக்கூடம் திறக்க முதல் தினத்தன்று ஐந்தாவது பீரியடு சமஸ்கிருத வகுப்பில் எஸ்.எஸ்.எல்.ஸியைச் சேர்ந்த பெண் ஒருத்தி முற்றிலும் எதிர்பாராத ஒரு கேள்வியை அவனிடம் கேட்டு அவனையும், வகுப்பையும் ஒரே வேளையில் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தாள்:

“சண்பகம் என்ற இலக்கியப் பத்திரிகையில் எஸ்.ராஜன் என்கிற பெயரில் கதைகள் எழுதுவது நீங்கள்தானா சார்?” .

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுமுன் புவனேஸ்வரியின் அழகிய முகத்தையும், கவர்ச்சி நிறைந்த கண்களையும் பார்த்தான் அவன். அந்தக் கண்களில் ஆவல் ததும்பி நின்றது.

அவன் சிரித்துக் கொண்டே பதில் கூறினான் :

“ஆமாம்! நான்தான்.”

உடனே வகுப்பு முழுவதும் ஒருவருக்கொருவர் வியந்து பேசும் மெல்லிய குரல்கள் பூத்து நிறைந்தன. ஒரு பேருண்மையைக் கண்டு பிடித்தது போன்ற மலர்ச்சி அங்கே பிறந்தது. அபூர்வமான மனிதர் ஒருவரைத் தங்களிடையே திடீரெனக் கண்ட ஒரு கூட்டத்தின் வியப்பும், பரபரப்பும் அந்த எட்டுப் பேரடங்கிய சிறிய வகுப்பறையில் உண்டாயிற்று. அந்தப் பரபரப்பு அவனது எழுத்தாள மனத்துக்குப் பிடித்தாலும், வாத்தியார் மனத்துக்குப் பிடிக்கவில்லை. -

“ஸைலன்ஸ்” என்று குரல் கொடுத்தான் சுந்தரராஜன். வகுப்பில் அமைதி நிலவியது. உடனே ரகு வமிசம் - இந்துமதியின் சுயம்வரம் பாடம் விளக்கப்பட்டது. மாணவிகளிடையே மறுபடி அமைதி பிறந்தது.

“இந்துமதி ஒவ்வோர் அரசனையும் கடந்த போது இருண்ட வீதி ஒன்றில் கொண்டு போகப்படும் தீபமானது, பின்னால் இருளைப் பரவ விட்டு அடுத்து எதிர் வரும்
நா.பா. II - 9